கரூர் மாணவி சோனாலி கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டது வேதனை தருகிறது. மனிதநேயமற்ற இந்த செயல் கண்டிக்கத்தக்கது, மன்னிக்க முடியாதது. அன்பு செலுத்த விரும்பியவர்களையே கொலை செய்ய முடிவது எப்படி சாத்தியம். கொலை வெறியைத் தூண்டுவது எவ்வகையான காதல்? என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். கரூரில் பொறியியல் கல்லூரி மாணவி சோனாலி நேற்று கொடூரமான முறையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவனால் கொலை செய்யப்பட்டார். வகுப்பறையில் வைத்து நடந்த இந்த கொடூரக் கொலை அனைவரையும் அதிர வைத்துள்ளது.
இந்த நிலையில் இக்கொலைக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை சுவாதி, விழுப்புரம் நவீனா படுகொலைகளால் ஏற்பட்ட அதிர்ச்சி நீங்குவதற்கு முன்பாகவே கரூரில் பொறியியல் மாணவி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். காதலின் பெயரால் மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு இழைக்கப்படும் மிருகத்தனமான கொடுமை அதிர்ச்சியளிக்கிறது. கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த சோனாலி என்ற மாணவிக்கு, அதே கல்லூரியிலிருந்து மோசமான நடத்தையால் இடை நீக்கம் செய்யப்பட்ட உதயகுமார் என்ற நான்காமாண்டு மாணவர் கடந்த இரு ஆண்டுகளாகவே பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். தம்மை காதலிக்க வேண்டும் என்று சோனாலிக்கு உதயகுமார் மிரட்டல் விடுத்திருக்கிறார். அதை சோனாலி ஏற்காத நிலையில், நேற்று காலை மது போதையில் கல்லூரிக்குள் நுழைந்த உதயகுமார் வகுப்பறையில் இருந்த சோனாலியை மரக்கட்டையால் சரமாரியாக அடித்து படுகொலை செய்திருக்கிறார். சோனாலியைக் காப்பாற்றும் நோக்குடன் அங்கு வந்த பேராசிரியர் ஒருவரையும் கொடூரமாக தாக்கிவிட்டு தப்பி ஓடியிருக்கிறார். மனிதநேயமற்ற இக்கொலை கடுமையாக கண்டிக்கத்தக்கது; மன்னிக்க முடியாதது.
மாணவி சோனாலி கல்லூரியில் சேர்ந்த நாளில் இருந்தே அவருக்கு உதயகுமார் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் மாணவி சோனாலி புகார் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, கல்லூரியிலும் உதயகுமார் ஒழுக்கக்கேடாக நடந்திருக்கிறார். இதையடுத்து கடந்த ஆண்டு உதயகுமார் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கல்லூரி மாணவனின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் உதயகுமார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் விட்டிருக்கின்றனர். ஆனால், அதன்பிறகும் திருந்தாத உதயகுமார் சோனாலிக்கு தொடர் தொல்லை தந்ததுடன் கொலையும் செய்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மாணவிகளையும், இளம் பெண்களையும் சில மிருகங்கள் துரத்தி துரத்தி காதலிப்பதாக தொல்லை கொடுப்பதும், காதலை ஏற்க மறுக்கும் பெண்களை கொடூரமாக கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது. காதல் என்பதே அன்பின் வெளிப்பாடு தான். ஆனால், அன்பை வெளிப்படுத்துவதாக கூறுபவர்களால், அது ஏற்கப்படவில்லை என்றதுமே, அன்பு செலுத்த விரும்பியவர்களையே கொலை செய்ய முடிவது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. கொலை வெறியைத் தூண்டுவது எவ்வகையான காதலாக இருக்கும் என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
காதலிப்பதாகக் கூறி மாணவிகளை பின்தொடர்ந்து சென்று தொல்லை தருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் பெண்களை பாதுகாக்க முடியும். ஆனால், அதை செய்ய அரசு தயங்குவது ஏன்? என்று தெரியவில்லை. பெண்கள் பாதுகாப்புக்காக கடந்த 01.01.2013 அன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்த 13 அம்சத் திட்டத்தில், பொதுமக்கள் அதிகமாக நடமாடும் வணிக மையங்கள், பெண்கள் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் பெண்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடியவர்களின் நடமாட்டத்தைச் சீருடை அணியாத காவல்துறையினர் கண்காணித்து இத்தகையக் குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பர் என்று கூறப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, இவ்வாறு தொல்லை தருபவர்களை தண்டிப்பதற்காக இந்திய தண்டனை சட்டத்தில் 345டி என்ற புதிய பிரிவை கடந்த 2013 ஆண்டு மத்திய அரசு சேர்த்தது. ஆனால், முதலமைச்சரின் திட்டமும், மத்திய அரசின் சட்டமும் செயல்படுத்தப்படாததால் தான் பெண்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கும், அலுவலகங்களுக்கும் செல்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதற்காக கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட மகளிர் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்துவதுடன், கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங் களிலும் பெண்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, கரூர் மாணவி சோனாலி படுகொலை வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து கொலையாளிக்கு தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment