Latest News

இன்போசிஸ் மற்றும் ராணுவ ரகசியங்களை விற்றாரா சுவாதி... ராம்குமார் தாயார் புகாரால் புதிய பரபரப்பு


மைசூரில் வேலை பார்த்தபோது இன்போசிஸ் நிறுவனம் மற்றும் ராணுவ ரகசியங்களை சுவாதி சட்டவிரோதமான முறையில் விற்றதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் தாயார் கூறியிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் பெண் பொறியாளரான சுவாதி. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது இந்த சம்பவம். துப்பு எதுவும் கிடைக்காமல் கொலையாளியை பிடிக்க முதலில் போலீசார் திணறினர். பின்னர் ரயில் நிலையம் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

வழக்கறிஞர்கள் வாதம்... ஆனால், ராம்குமார் உண்மையான குற்றவாளி கிடையாது. போலீசார் வழக்கை விரைந்து முடிக்க ராம்குமாரை பலிகடா ஆக்க முயலுகின்றனர் என அவரது வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஒரு தலைக் காதல் தோல்வி காரணமாக தொடர்ந்து இந்த கொலை சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டாலும், தொடர்ந்து வழக்கில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன.

வீடியோ... இந்நிலையில், சுவாதி கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ராம்குமாரின் தாயார் புஷ்பம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர், "சென்னையைச் சேர்ந்த ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி கடந்த ஜூன் 24 ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்றபோது அங்கு இருந்த பலர் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளனர்.

போலீசில் புகார்... அப்போது ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளை சுவாதியை கொலை செய்த கொலைகாரர்கள் துரத்தினர் என சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் நுங்கம்பாக்கம் போலீஸில் தகவல் தெரிவித்துள்ளனர்.
6 தனிப்படை... இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டு 14 சிம் கார்டுகள் மற்றும் ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் முதலில் தெரிவித்தனர்.

நண்பரிடம் விசாரணை... சுவாதி கொலையில் பிலால் சித்திக் மீது சந்தேகம் உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அவரிடம் 4 நாட்கள் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். குறிப்பாக பெங்களூருவில் கொலை தொடர்பான ஆதாரங்களைத் திரட்டியுள்ளனர். ஆனால் இது தொடர்பான உண்மையை போலீஸார் மறைத்துள்ளனர். சுவாதி கொலை காதல் அல்லது வேறு காரணங்களுக்காக நடந்து இருக்கலாம்.

காதல் திருமணம்... சம்பவம் நடைபெறுவதற்கு 17 நாட்களுக்கு முன்பாக சுவாதியை அடையாளம் தெரியாத ஒருவர் தாக்கியதைப் பயணி ஒருவர் பார்த்துள்ளார். மதுரை மற்றும் ஒட்டன்சத்திரத்தில் 2 பேரைக் கைது செய்துள்ளதை வெளியே காட்டவில்லை. இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவரை சுவாதி காதல் திருமணம் செய்து மதம் மாறியுள்ளதாக பெங்களூரு சென்ற போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

தனிப்பிரிவில் மனு... சுவாதி மரணம் குறித்து தன் குடும்பத்தினரிடம் விசாரிக்க வேண்டாம் என சுவாதியின் தந்தை முதல்வரின் தனிப் பிரிவில் மனு கொடுத்துள்ளார். எனவே சுவாதி குடும்பத்தாரிடம் போலீஸார் சரியாக விசாரணை நடத்தவில்லை. சுவாதியை ஒருவர் கடுமையாக தாக்கியதாகவும், அதை சுவாதி பொறுத்துக் கொண்டதாகவும் சுவாதியின் தோழி ஒருவர் போலீஸில் கூறியுள்ளார்.

ராணுவ ரகசியங்கள்... பெங்களூருவில் சுவாதி பணியாற்றிய இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ரகசியங்கள் மற்றும் இந்திய ராணுவத்தின் ரகசியங்களை சுவாதி விற்றதாக பெங்களூருவில் உள்ள தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளது பெங்களூரு சென்ற தனிப்படை போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிபிஐ விசாரணை... இந்தக் கொலையில் பல உண்மைகளை போலீஸார் மறைத்துவிட்டனர். வேண்டுமென்றே எனது மகன் ராம்குமாரை குற்றவாளியாக்கியுள்ளனர். மோசமான புலன் விசாரணை நடந்து வருகிறது. தமிழக போலீஸார் இந்த வழக்கை விசாரித்தால் உண்மை குற்றவாளிகள் தப்பிவிடுவர். ஆகவே இந்த கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

புதிய பரபரப்பு... சுவாதி கொலை சம்பவத்தை யாருமே செல்போனில் படம் பிடிக்கவில்லை என இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில், ரயில் நிலையத்தில் இருந்த சிலர் சம்பவத்தை படம் பிடித்ததாகவும், போலீசில் புகார் அளித்ததாகவும் புஷ்பா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பம்... அதோடு, சுவாதி கொலையில் காதல் விவகாரம் மட்டுமின்றி, அவர் ராணுவ ரகசியங்களை விற்றதும் காரணமாக இருக்கலாம் என புஷ்பா சந்தேகம் தெரிவித்திருப்பது வழக்கு விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை... புஷ்பாவின் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது மேலும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.