Latest News

போயஸ் தோட்டத்தில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு "விஐபி" கல்யாணம்.. இளவரசி மகனுக்கு.. ஆக. 29ல்!


சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகனும் 'ஜாஸ் சினிமாஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான விவேக் ஜெயராமனின் திருமணம் வரும் 29ம் தேதி சென்னை வானகரத்தில் நடக்கிறது. திருமணத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்க மாட்டார் என்றும் மணமக்களுக்கு ஆசி மட்டுமே வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. சென்னை அண்ணா நகர் பாஸ்கர் - ஜெயா தம்பதியினரின் மகளும் மருத்துவக் கல்லூரி மாணவியுமான கீர்த்தனாவை அவர் மணக்கிறார். இந்த திருமண நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளமாட்டார் என்றும், திருமணத்துக்கு பிறகு போயஸ் தோட்டத்திற்கு சென்று முதல்வரிடம் மணமக்கள் ஆசி பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து செப் டம்பர் 2-ம் தேதி தஞ்சாவூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது

அ.தி.மு.க. வட்டாரத்தில் மிகுந்த செல்வாக்கு உடையவராக வலம் வருகிறார் விவேக். ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தைக் கட்டமைத்ததில் இவருக்குப் பெரிய பங்கு உண்டு. ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தைக் கவனித்துக்கொண்டிருந்த சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், ஒருநாள் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்துவிட்டார். ஜெயராமனின் மனைவி இளவரசி... கிருஷ்ணபிரியா, ஷகிலா, விவேக் என மூன்று குழந்தைகளோடு போயஸ் தோட்டத்திற்குள் வந்தார். கைக்குழந்தையாக இருந்தபோதே அப்பாவை இழந்ததால், விவேக் மீது மிகுந்த பிரியத்தோடு இருந்தார் ஜெயலலிதா. கோவையில் உள்ள சின்மயா மிஷன் சர்வதேசப் பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்தார் விவேக். 2013ம் ஆண்டு எம்.பி.ஏ மார்க் கெட்டிங் முடித்த விவேக், படிப்பை முடித்ததும் பெங்களூருவில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் ரீஜினல் மார்க்கெட்டிங் கோ-ஆர்டினேட்டராக வேலைக்குச் சேர்ந்தார். இவரது பள்ளி, கல்லூரி காலம் முழுவதும் வளர்த்தது எல்லாம் மன்னார்குடி திவாகரன்தானாம். ஆகஸ்ட் இறுதிக்குள் விவேக் திருமணம் செய்தாக வேண்டும் என ஜாதகத்தில் இருக்கிறது. தள்ளிப் போடக்கூடாது என்று ஜோதிடர்கள் கணித்ததால், சசிகலாவின் தம்பி திவாகரன்தான், திருமண ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வந்தார்.

சென்னை அண்ணா நகர் பாஸ்கர் - ஜெயா தம்பதியினரின் மகளும் மருத்துவக் கல்லூரி மாணவியுமான கீர்த்தனாவின் ஜாதகம் பொருந்திப் போனதால், மகிழ்ந்து போனார் விவேக்கின் தாய் இளவரசி. ஆகஸ்ட் 29ம் தேதி வானகரத்தில் உள்ள எம்.எம்.திருமண மண்டபத்தில் கல்யாணம் நடக்க இருக்கிறது. திருமணத்தை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என சசிகலாவின் உறவினர்கள் வேலை பார்த்து வருகின்றனர். முதல்வர் கலந்து கொண்டால், மீண்டும் கார்டனுக்குள் மன்னார்குடி சொந்தங்கள் வலம் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தார்கள். ஆனால், திருமணத்தோடு தொடர்புடைய முக்கிய பிரமுகர் ஒருவர் சில சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறார். அந்த நபரோடு மேடையில் தோன்றினால், தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படும்' என உளவுத்துறை தெரிவித்துள்ளது. எனவே, விவேக் திருமணத்தில் முதல்வர் பங்கேற்கும் வாய்ப்பு மிகக் குறைவுதான் என்கின்றனர். பொதுவாகவே, மன்னார்குடி வாரிசுகளின் திருமண விழாக்களில் முதல்வர் பங்கெடுப்பதில்லை. 'விவேக் திருமணத்திலும் சர்ச்சைகள் அணிவகுக்க வாய்ப்பு அளித்துவிடக் கூடாது' என்பதே முதல்வரின் எண்ணம் என்று அதிமுகவினர் கூறுகின்றனர். அதேநேரத்தில் முதல்வரின் முழு ஆசிர்வாதமும் விவேக்கிற்கு உண்டு என்று கூறுகின்றனர் அதிமுகவினர். திருமணம் முடிந்த கையோடு போயஸ் தோட்டத்திற்கு சென்று முதல்வரிடம் மணமக்கள் ஆசி பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. வாய் பிளக்க வைத்த வளர்ப்பு மகன் கல்யாணத்திற்குப் பிறகு: 1995ல் தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, தமிழர்கள் வாய்பிளக்கும் வகையில் தன் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு திருமணம் என்னும் திருவிழாவை நடத்திக் காட்டினார். 19 வருடங்களுக்கு முன்பு 8.9.95 அன்று நடைபெற்ற சுதாகரனின் பிரமாண்ட திருமணத்தை தற்போதைய தலைமுறையினர் கண்டிப்பாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த திருமணம்தான் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முடிவு கட்டியது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போயஸ்தோட்டத்தில் இருந்து கெட்டி மேளச்சத்தம் கேட்கத் தொடங்கியுள்ளது. இந்த திருமணத்தில் ஜெயலலிதா பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டாலும் பரிபூரண ஆசி கிடைக்கும் என்பதால் மணமகன் விவேக் மகிழ்ச்சியடைந்துள்ளாராம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.