நெல்லையில் அம்மா உணவகத்தில் லட்சகணக்கில் ஊழல் நடந்ததாக கண்டுபிடித்த அதிகாரி திடீரென மாற்றப்பட்டார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகராட்சி பகுதியில் 11 அம்மா உணவகங்கள் உள்ளன. இங்கு தினமும் 1200 இட்லி, 300 சம்பார் சாதம், 300 தயிர் சாதம் உள்ளிட்டவை தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 1200 இட்லி தயாரிக்க 30 கிலோ புழுங்கல் அரிசி, 6 கிலோ உளுந்து, தயிர் சாதம் தயாரிக்க 25 கிலோ பச்சரிசி, தயிர் 12.5 கிலோ, சமையல் எண்ணெய் ஓரு லிட்டர், சம்பார் சாதம் தயாரிக்க புழுங்கல் அரிசி 25 கிலோ, துவரம் பருப்பு 8 கிலோ, சமையல் எண்ணெய் 2.50 லிட்டர், சம்பார் பொடி 1.25 கிலோ மற்றும் மசலா பொருட்கள் கூட்டுறவு அங்காடி மூலம் வாங்கப்படுகிறது.
கடந்த ஓராண்டில் அம்மா உணவகத்திற்கு அரிசி, பருப்பு, எண்ணெய் வாங்கியதில் சுமார் ரூ.15,22,034 ரூபாய் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அம்மா உணவகத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் நிர்ணயித்ததை விட குறைந்த அளவில் உணவு தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தயிர் வாங்கியதில் மட்டும் தேவைக்கு அதிகமாக ரூ.7,13,400; பலசரக்கு கூடுதலாக வாங்கியதில் ரூ.26,090, கேஸ் வாங்கியதில் ரூ.2,00279, முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அம்மா உணவக ஊழியர்கள் 9 பேரை சுகாதாரத்துறை அதிகாரி ராஜசேகர் அதிரடி சஸ்பெண்ட் செய்தார். இவற்றில் பெரும்பாலானோர் அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகளின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. நெல்லை டவுன் வையாபுரி அம்மா உணவகத்தில் உள்ள உணவக ஊழியர் அதிமுக கவுன்சிலரின் மகள் ஆவார். இவர் மீதும் நடவடிக்கை பாய்ந்தது. இதனால் ஆளும்கட்சியினர் அதிகாரிகளுக்கு எதிராக போக்கொடி தூக்கினர். மாற்றம் செய்த அம்மா உணவக ஊழியர்கள் மாறி போகாமல் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சுகாதாரத்துறை அதிகாரி ராஜசேகர் திடீரென மாற்றப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment