சர்ச்சைக்குரிய அனைவருக்கும் பொதுவான ஒரே சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து ஆராயுமாறு சட்ட ஆணையத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைவருக்கும் பொதுவான ஒரே சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது பாரதிய ஜனதாவின் நீண்டகால கொள்கை. கடந்த 1998, 1999 ஆண்டுகளில் பாஜக ஆட்சிக்கு வந்த போது பொதுசிவில் சட்டத்தைக் கொண்டுவர முயற்சித்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
2014 லோக்சபா தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமைத்த போதும் பொதுசிவில் சட்டம் குறித்து எதுவும் கூறாமல் இருந்து வந்தது. அதே நேரத்தில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது பொதுசிவில் சட்டம் குறித்து ஆராயுமாறு சட்ட ஆணையத்தை பாஜக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து முன்னர் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, இந்த விவகாரத்தை மத்திய சட்ட ஆணையத்தின் ஆய்வுக்கு விடலாம். இதில் ஒரு முடிவு எடுப்பதற்கு, பல்வேறு தனிநபர் சட்ட வாரியங்களுடனும், சம்மந்தப்பட்ட அனைவருடனும் விரிவான ஆலோசனை நடத்தப்படும். ஆனால் அதற்கு கொஞ்ச காலம் ஆகும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பொதுசிவில் சட்டத்தைக் கையிலெடுத்துள்ள பாஜகவுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, இந்த விவகாரத்தை சட்ட ஆணையத்தின் ஆய்வுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. தேர்தலுக்கு சற்று முன்பாக இந்த விவகாரத்தை ஏன் எழுப்புகிறீர்கள்? இதில் அரசியல் கட்சிகளிடமும், சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்தொற்றுமை ஏற்படுத்த வேண்டும். உண்மையில் சொல்லப்போனால், இந்த விவகாரத்தை சட்ட ஆணையத்திடம் விடுவது அல்ல பிரச்சினை. அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினரின் ஒருமனதான ஆதரவையும் பெறுவதுதான் முக்கியம் எனக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment