சுவாதி கொலையாளி சென்னை சூளைமேடு பகுதியில் மேன்சன் ஒன்றி தங்கியிருந்தது தெரிய வந்ததையடுத்து, அனைத்து மேன்சன்களிலும் அங்கு தங்கியிருப்பவர்கள் குறித்த தெளிவான விவரங்களைப் பெறும் வேலையை நிர்வாகத்தினர் முடுக்கி விட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24ம் தேதி இன்போசிஸ் ஊழியர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ராம்குமார், சுவாதியின் வீடு இருந்த அதே சூளைமேடு பகுதியில் மேன்சன் ஒன்றில் தங்கியிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து மேன்சன்களிலும் நிர்வாகத்தார், அங்கு தங்கியிருப்போரின் தெளிவான முழு விபரங்களைப் பெறும் பணியை தொடக்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னை வருகை... வேலை வாய்ப்பு, கல்வி எனப் பல்வேறு காரணங்களுக்கு தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை வந்து தங்கியிருப்போர் ஏராளம். இவர்களில் பெண்களுக்கு என பரவலாக ஹாஸ்டல்கள் காணப்படுகின்றன.
ஹாஸ்டல்... ஆனால், ஆண்களுக்கு இது போன்று உணவு வசதியுடன் ஹாஸ்டல் வசதி அவ்வளவாக இல்லை. பேச்சுலர்களுக்கு தனியாக வீடு வாடகைக்கு தருவதற்கும் வீட்டு உரிமையாளர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை.
மேன்சன்கள்... எனவே, இவ்வாறு குடும்பத்தைப் பிரிந்து சென்னை வரும் ஆண்களுக்கு மேன்சன்கள் தான் வரப்பிரசாதமாக அமைகின்றன. ஏறக்குறைய இவையும் ஹாஸ்டல் போன்றவை தான் என்றாலும், உணவு வசதி இங்கு ஏற்படுத்தித் தரப்படுவதில்லை. ஹோட்டல் போன்று அறையை மட்டும் மாத வாடகைக்கு எடுத்துக் கொண்டு, உணவை கடையில் வாங்கி சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
போலீஸ் உத்தரவு... இதனால், பெரும்பாலும் ஒரு அறையில் தங்கி இருப்பவர்களின் விபரங்கள் மற்றவர்களுக்குத் தெரிய வருவதில்லை. ஆனால், இவ்வாறு அங்கு தங்கி இருப்பவர்களின் தெளிவான முழு விபரத்தையும் மேன்சன் நிர்வாகத்தினர் பெற்று வைத்திருக்க வேண்டும் என்பது போலீசாரின் உத்தரவு. ஆனால், இது பெரும்பாலான மேன்சன்களில் முறையாக பின்பற்றப்படுவதில்லை.
சுவாதி வழக்கு... ஆனால், சுவாதி கொலை வழக்கில் மேன்சனில் உடன் தங்கியிருந்தவர் மூலமாகவே ராம்குமார் குறித்த துப்பு கிடைத்தது. அப்போது அங்கிருந்த ராம்குமாரின் முகவரியை வைத்தே, கொலையாளியை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
உண்மை விபரங்கள்... இதன் தொடர்ச்சியாக, தற்போது சென்னையில் உள்ள மேன்சன்களில் தங்கியிருப்போர் குறித்த தெளிவான விவரங்களை பெறும் முயற்சியில் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேன்சன்களில் தங்கியிருப்போர் தங்களது நிலையான முகவரி, கல்வித்தகுதி, வேலை அல்லது கல்வி கற்கும் இடம் போன்றவற்றின் தகவல்களைத் தரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment