உடுமலைப்பேட்டையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் மனைவிக்கு மாதம்தோறும் பென்ஷன் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. சங்கரின் தந்தை வேலுச்சாமிக்கு சத்துணவு துறையில் வேலை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 'அரசின் இந்த உத்தரவால் மனதளவில் மகிழ்ச்சியாக இருக்கிறார் கவுசல்யா' என்கிறார் எவிடென்ஸ் அமைப்பின் கதிர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் சங்கரும், பழனியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரது மகள் கவுசல்யாவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது காதலுக்கு கவுசல்யாவின் வீட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையும் மீறி, கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியேறி, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதியன்று, உடுமலை மத்தியப் பேருந்து நிலையம் எதிரில் உள்ள வணிக வளாகத்தில் பொருட்களைக் வாங்கிக் கொண்டு, பிற்பகல் 3 மணியளவில் சாலையை கடக்க நின்று கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், கெளசல்யா மற்றும் சங்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் கணவன், மனைவி படுகாயமடைந்து மயங்கி கீழே விழுந்தனர். அந்தப் பகுதியில் நின்ற சில பொதுமக்கள் அத்தம்பதியரை காப்பற்ற முயன்றனர். ஆனால், அவர்களையும் அந்த நபர்கள் வெட்ட முயன்றதால் அங்கு பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. அதன்பின் இருவரையும் வெட்டி வீழ்த்திய அந்த மூவரும், சாவகாசமாக பைக்கில் ஏறி தப்பி சென்றனர்.
உடுமலை நகரில், பட்டப் பகலில் நடந்த இந்தப் படுகொலைச் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன்பின்னர், சங்கரின் பிரிவைத் தாங்க முடியாமல் தற்கொலை முடிவுக்குச் சென்ற கவுசல்யா, கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். அதன்பிறகு, மனநலரீதியான கவுன்சலிங் பெறுவதற்காக மதுரையில் தங்கியிருக்கிறார் கவுசல்யா. எவிடென்ஸ் கதிரின் பாதுகாப்பில் தினசரி சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில், கவுசல்யாவிற்கு மாதம்தோறும் 11,250 ரூபாய் பென்ஷன் வழங்குவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. இதுதவிர, சங்கரின் தந்தை வேலுச்சாமிக்கு சத்துணவுத் துறையில் வேலை ஒதுக்கீடு செய்தும் உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி நம்மிடம் பேசிய எவிடென்ஸ் கதிர், " அரசின் இந்த உத்தரவு கவுசல்யாவுக்கு மனதளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் இழப்பீடு வழங்குவது பற்றி எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தில் தெளிவாக வரையறை செய்துள்ளனர். சங்கரின் குடும்பத்தினருக்கு சரியான வீடு இல்லை என திருப்பூர் ஆட்சியரிடம் தெரிவித்தோம். பசுமை வீடு கட்டுவதற்காக ரூ.2 லட்சத்து பத்தாயிரம் ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்தது. படுகொலை சம்பவம் நடந்த சில நாட்களில் இழப்பீடாக ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியது. இதன்பின்னரும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியிடம் கோரிக்கை வைத்தோம்.
அதனை ஏற்று சங்கரின் தந்தைக்கு சத்துணவு துறையில் வேலை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கவுசல்யாவுக்கு மாதம் 11 ஆயிரத்து 250 ரூபாய் ஓய்வூதியம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். கவுசல்யா பிளஸ் 2 முடித்துள்ளதால், எழுத்தர் வேலை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். திருப்பூர் மற்றும் காங்கேயத்தில் வேலை காலியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். கவுன்சலிங் முடிந்தபிறகு, வேலைக்கான உத்தரவை வாங்க இருக்கிறோம். அவர் பணியில் சேரும் வரையில் அரசின் ஓய்வூதியம் கிடைக்கும். சங்கர் படுகொலையால் மனதளவில் நொறுங்கிக் கிடந்த கவுசல்யா, அரசின் உத்தரவால் சற்று மகிழ்ச்சியாக இருக்கிறார்" என்றார் விரிவாக.
-ஆ.விஜயானந்த்
நன்றி : ஆனந்த விகடன்
No comments:
Post a Comment