சர்ச்சைக்குரிய மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பல்வேறு பிரிவு தலைவர்களுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 6 மணிநேரம் ஆலோசனை நடத்தியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத்திய பாரதிய ஜனதா அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டுவர முடிவெடுத்துள்ளது. இதற்காக முன்னாள் கேபினட் செயலர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 80,000 பரிந்துரைகளை இக்கமிட்டி பெற்றுள்ளது.
ஆனால் இந்த கல்விக் கொள்கை இந்துத்துவா அடிப்படையிலானதாக இருக்கும் என்பதால் பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் பாஜகவின் தாய் அமைப்பான, இந்துத்துவாவை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று 6 மணிநேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறார். வித்யா பார்தி, அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத், ராஷ்டிரிய சாய்க்சிக் மகாசங், பாரதிய சிக்ஷான் மண்டல், சான்ஸ்கிர்ட் பார்தி, சிக்ஷா பசோ அந்தோலன், விக்யான் பார்தி, இதிஹாஸ் சங்கல்யான் யோஜனா ஆகியவற்றின் நிர்வாகிகளுடன் டெல்லி குஜராத் பவனில் இந்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச்செயலர் கிருஷ்ண கோபால், பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையின் போது உடன் இருந்துள்ளனர். ஏற்கனவே இந்துத்துவா கொள்கையைத் திணிக்கும் வகையில்தான் புதிய கல்வி கொள்கை இருக்கும் என குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில் வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினருடன் மத்திய அமைச்சர் ஆலோசனை நடத்தியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
No comments:
Post a Comment