மதுரையில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டு வந்த தனியார் ஆம்னி பேருந்து, நள்ளிரவில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகில் தீப்பிடித்து எரிந்து நாசம் அடைந்தது. இந்த விபத்தில் பேருந்தில் வந்த 27 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மதுரையில் இருந்து சென்னைக்கு வெள்ளிக்கிழமை 10.45 மணிக்கு புறப்பட்ட படுக்கை வசதி கொண்ட தனியார் ஆம்னி பேருந்தை ராமநாதபுரத்தையைச் சேர்ந்த ஓட்டுநர் எ. இலங்கேஸ்வரன்,38 ஓட்டி வந்தார்.
விராலிமலை அருகே புதுப்பட்டி பிரிவு சாலை அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 12 மணியளவில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை சுங்கச்சாவடி அருகே செல்லும் போது, பஸ்சின் ஏ.சி.மிஷினில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக புகை வந்துள்ளது. இதனை கண்ணாடி வழியாக பார்த்த டிரைவர் அதிர்ச்சியடைந்தார். உடனே பேருந்தை நிறுத்திய டிரைவர், தூங்கி கொண்டிருந்த பயணிகள் அனைவரையும் எழுப்பி கீழே இறக்கி விட்டார். பயணிகள் இறங்கிய அடுத்த சில நிமிடங்களில் பஸ்சின் பின்பகுதியில் பிடித்த தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது. இது குறித்த தகவல் அறிந்ததும் இலுப்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பஸ் முழுவதும் தீயில் எரிந்து எலும்புக்கூடானது. டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு, பயணிகளை இறக்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment