ஒரே பள்ளியில் படித்த மாணவிகள் ஒரே கல்லூரியில் இணைந்து படிக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஒன்று. மருத்துவ கலந்தாய்வுக்கு வந்த மாணவிகளில் ஒருவர் தனக்கு எம்.எம்.சி மருத்துவ கல்லூரியில் படிக்க கிடைத்த வாய்ப்பை தனது தோழிக்கு விட்டுக் கொடுத்து விட்டார்.
நாளை நடக்கும் கலந்தாய்வில் தனக்கு அதே கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நட்புக்காக அந்த மாணவி விட்டுக்கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், 2 இஎஸ்ஐ மருத்துவ கல்லூரிகள் மற்றும் 6 தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்களுக்கான கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது. மருத்துவ படிப்புக்களுக்கான தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், முதல்கட்டமாக, விளையாட்டு பிரிவு மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட ஒதுக்கீடுகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், முன்னாள் ராணுவத்தினர் ஒதுக்கீட்டில் 199.00 கட் ஆஃப் மார்க் எடுத்த மாணவி வர்ஷினி அழைக்கப்பட்டார். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அவருக்கு ராணுவ ஒதுக்கீட்டில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் (எம்.எம்.சி) சேருவதற்கான தகுதி இருந்தது. அவரது தோழி ஜனனி 198.75 கட் ஆஃப் எடுத்து 2வது இடத்தில் இருந்தார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இவருக்கு எம்.எம்.சி.யில் சேருவதற்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகத்திற்கிடமாக இருந்தது. முன்னாள் ராணுவ பிள்ளைகள் ஒதுக்கீட்டில் ஒருவருக்கு மட்டும்தான் அரசு மருத்துவக் கல்லுரியில் இடம் வழங்கப்படும். மாணவி வர்ஷினி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராக இருப்பதால் நாளை நடக்கும் பொது கலந்தாய்வில் பங்கேற்று எம்.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்ற நிலை இருந்தது. எனவே, தனது தோழி ஜனனிக்கு தனக்கு கிடைத்த வாய்ப்பை வர்ஷினி விட்டுக் கொடுத்தார்.
இதனால் தோழி ஜனனிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அவர் முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்திற்கான ஒதுக்கீட்டில் முதல் மாணவியாக தேர்வு செய்யப்பட்டு எம்.எம்.சி. கல்லூரியை தேர்வு செய்தார். அவருக்கு ஒதுக்கீட்டு கடிதம் வழங்கப்பட்டது. மாணவிகளின் இந்த நட்புக்காக சம்பவம் அங்கிருந்தவர்கள் மட்டுமல்லாமல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. நாளைய கலந்தாய்வில் வர்ஷினிக்கு எம்.எம்.சியில் கிடைத்தால் பள்ளியில் ஒன்றாக படித்த மாணவிகள் கல்லூரியிலும் இணை பிரியாமல் படிப்பார்கள் என்றும் பெற்றோர்கள் பேசிக்கொண்டனர். பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை தொடங்கி 25ம்தேதி வரை நடைபெறுகிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ- மாணவிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளை மருத்துவ தேர்வுக்குழு செய்துள்ளது.
No comments:
Post a Comment