தமிழக போலீஸுக்கு இதோ இன்னும் ஒரு சவால் வந்துள்ளது. ஓசூர் சர்வேயர் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளியான இக்ரமுல்லா என்பவர், மீண்டும் ஒரு செய்தியை வாட்ஸ் ஆப்பில் விட்டுள்ளார். அதில் தான் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். அவர் வாட்ஸ் ஆப்பில் வீடியோ ரிலீஸ் செய்வது இது 2வது முறையாகும். ஏற்கனவே வாட்ஸ் ஆப் மூலம் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் இக்ரமுல்லா. அதில் பெரிதாக விரிவுரை அளித்திருந்தார். இந்த நிலையில் இன்னொரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
இப்படித்தான் முன்பு கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான யுவராஜ் என்பவர் தலைமறைவாக இருந்து கொண்டு வாட்ஸ் ஆப்பில் வீடியோக்களாக அனுப்பி போலீஸாருக்கு அறிவுரை கூறியும், அரசுக்கு அறிவுரை கூறியும் போலீஸாரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கினார். பின்னர் சரணடையப் போவதையும் கூட பெரிய விழா போல மாற்றி தமிழக காவல்துறையைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்கும் நிலைக்குக் கொண்டு சென்றார். கைதாகி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது அந்தப் படமும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்னொருவர் தமிழக போலீஸுக்கு சவால் விட்டுள்ளார். அவரது பெயர் இக்ரமுல்லா. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நில அளவையாக இருந்த குவளைச் செழியன், கடந்த மாதம் 28ஆம் தேதி காரில் கடத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இக்ரமுல்லா, கலைவாணர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இதில் இக்ரமுல்லாதான் தனது கள்ளக்காதலிக்கு குவளை செழியன் பாலியல் ரீதியாக தொல்லை தந்து வந்ததால் கூலிப்படையை ஏவிக் கொலை செய்திருந்தார். அதன் பிறகு தலைமறைவாகி விட்ட இக்ரமுல்லா ஏற்கனவே ஒரு வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மற்றொரு வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார். அதில், என் குடும்பம் என்னை விட்டு போய்விட்டது. என் வாழ்க்கையே இல்லாமல் ஆகிவிட்டது. நான் தற்கொலை செய்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன். என்னுடைய தற்கொலைக்கு நானேதான் காரணம் என கூறியுள்ளார். இந்த வீடியோ எங்கிருந்து வந்தது என்பதை அறிய போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இக்ரமுல்லாவைப் பிடிக்கவும் போலீஸார் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.
No comments:
Post a Comment