பல லட்சம் போலி வாக்காளர்கள் நிறைந்த வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் தேர்தல்கள் ஜனநாயகச் செயல் முறைகளையே கேலிக் கூத்தாக்கி விடாதா? மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்; கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்த வேண்டும் என தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் ஒரு உத்தரவு அனுப்பியிருக்கிறது. இந்த உத்தரவைப் படிக்கும்போது, "குதிரை களவு போனபின் லாயத்தை இழுத்துப் பூட்டுகின்ற செயல்"என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.
தமிழகத்தில் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்த பின், தற்போது தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்த உத்தரவு பிறப்பித்து என்ன பயன்? வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்த தலைமைத் தேர்தல் ஆணையம், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கிறது என்றால், ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டப் பேரவைத் தேர்தலிலும் நடந்து முடிந்த இமாலயத் தவறுக்கு யார் பொறுப்பு? தி.மு.க. சார்பில் பல முறை தரப்பட்ட புகார் மனுக்களின் கதி என்ன? தலைமைத் தேர்தல் ஆணையமே, தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையம் சரியாக இந்தப் பணியைச் செய்யவில்லை என்பதை இப்போது காலம் கடந்தாவது ஒப்புக் கொள்கிறதா? சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு, சரியான தூய்மையான வாக்காளர் பட்டியல் தானே அடிப்படை! முறையான வலிமையான அஸ்திவாரம் இல்லை என்றால், அதன் மீது எழுப்பப்படும் கட்டிடம், மவுலிவாக்கம் அடுக்கு மாடிக் கட்டிடம் போல சரிந்து சாய்ந்து மண்ணுக்குள் தானே புதைந்து விடும். பல லட்சம் போலி வாக்காளர்கள் நிறைந்த வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் தேர்தல்கள் ஜனநாயகச் செயல் முறைகளையே கேலிக் கூத்தாக்கி விடாதா? மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்; கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது? என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment