சுவாதியின் கொலை வழக்கில் கொலையாளியை பிடிக்க காவல்துறை துணை ஆணையர் தேவராஜ் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும் வழக்கு விசாரணையை திருவல்லிக்கேணி துணை ஆணையர் கண்காணிப்பார் எனவும், சி.பி.சி.ஐ.டி. மற்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு உதவி செய்து வருவதாவும் தெரிவித்துள்ளார்.
இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுவாதி, கடந்த வெள்ளிக்கிழமையன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை நாடு முழுவதும் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பட்டப் பகலில் ரயில் நிலையத்தில் பயணிகள் முன்னிலையில் கொலை செய்து விட்டு கொலையாளி தப்பி சென்ற விஷயம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கை ரயில்வே போலீசார் விசாரித்து வந்தனர். கொலையாளியை பற்றி இரண்டு வீடியோக்களும் கிடைத்தன. ஆனாலும் கடந்த 3 நாட்களாக வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், ரயில் நிலையத்தில் நடந்த கொலையால் இந்த வழக்கை யார் விசாரிப்பது என்பதில் சிக்கல் நீடிப்பதாக செய்தி வெளியானது. அதாவது, ரயில் நிலையங்கள் சென்னை மாநகர காவல்துறை வளையத்திற்குள் வராது என்பதால் இந்த வழக்கை விசாரிக்க நாங்கள் ரயில்வே போலீசாருக்கு உதவுவோம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் டி. கே. ராஜேந்திரன் கூறி இருந்தார். இந்த வழக்கில் முறையான விசாரணை துவங்கவில்லை என்ற செய்தியும் வெளியானது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரிப்பதில் குழப்பம் நீடிக்கிறதா? என்று இன்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. சுவாதி கொலை வழக்கில் ரயில்வே துறை கண்காணிப்பாளரும், சென்னை காவல் ஆணையரும் இணைந்து செயல்பட்டு குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். அப்படி இல்லாவிட்டால் தலைமை நீதிபதியின் அனுமதி பெற்று இந்த வழக்கை நீதிமன்றம் தாமாகவே முன் வந்து விசாரிக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். இதையடுத்து சுவாதி கொலை வழக்கு ரயில் காவல்துறையில் இருந்து சென்னை காவல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. சுவாதி கொலை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிற்பகலில் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டதை அடுத்து, அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது அவர், சுவாதி கொலை குறித்து விசாரணை நடத்த நுங்கம்பாக்கம் துணை ஆணையர் தேவராஜ் தலைமையில் 25 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார். மேலும் வழக்கு விசாரணையை திருவல்லிக்கேணி துணை ஆணையர்
கண்காணிப்பார் எனவும், சி.பி.சி.ஐ.டி.மற்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு உதவி செய்து வருவதாகவும் அவர் கூறினார். இதனையடுத்து நீதிபதிகள், கொலை நடந்து 2 மணிநேரம் போலீஸ் வராமல் என்ன செய்து கொண்டிருந்தனர்? என்று கேள்வி எழுப்பினர். உயிரிழந்தவர் உடல் மீது துணி போர்த்தாமல் இருந்தது ஏன் என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தனர்.
உயிரிழந்த பின்னரும் அவரது கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் ஏன் பொருத்தப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினர். குற்றவாளியை விரைவில் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment