சுவாதி கொலை வழக்கில், அவரது தோழிகள் கொலையாளியை அடையாளம் காட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபேஸ்புக்' வலைதளத்தில் தன்னுடன் பழகி, பல லட்சம் ரூபாயை ஏமாற்றிய வாலிபனே, சுவாதியை கொலை செய்துள்ளதாக ஒரு தோழி தெரிவித்துள்ளார். இதேபோல் சுவாதியை கொன்ற கொலையாளியை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நேரில் பார்த்ததாக மற்றொரு தோழி தெரிவித்துள்ளார். சுவாதியின் தோழிகளிடமும், நண்பர்களிடமும் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தனிப்படை போலீசார் கொலையாளியை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூன், 24ல், சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த சுவாதியை மர்ம நபர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்தார். சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் சங்கர் தலைமையில், எட்டு தனிப் படைகள், கொலையாளிகளை தேடி வருகின்றன. நுங்கம்பாக்கம் ரயில் நிலையம், சுவாதி வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை எடுத்து, கொலையாளியை முடிவு செய்தாலும், அவனது முகம் தெளிவாக தெரியாததால், குழப்பம் நீடிக்கிறது.
கொலையாளியின் படம் சுவாதி வீட்டை சுற்றியுள்ள கேமரா பதிவுகளிலும், கொலையாளியின் படங்கள் கிடைத்துள்ளன. சிசிடிவி கேமராவில் கிடைத்த தெளிவற்ற படங்களுடன், ஹைதராபாத் சென்ற போலீசார், அங்குள்ள மையம் ஒன்றில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், கொலையாளி படத்தை, தெளிவாக வரைந்துள்ளனர். அந்த படத்துடன் சென்னை திரும்பிய போலீசார் அதை புகைப்படமாக வெளியிட்டு, அடையாளம் காண முயற்சிகள் நடந்து வருகின்றன.
நோட்டம் விட்ட மர்மநபர் சுவாதியை கொலை செய்ய திட்டமிட்ட வாலிபன், அவர் வீடு முதல், ரயில் நிலையம் வரை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளான். இது கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்துள்ளது.
ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை சுவாதி பணிபுரியும் பரனுார் பகுதியிலும், நடமாடி இருக்கலாம் என கருதிய போலீசார், நேற்று செங்கல்பட்டு அருகேயுள்ள பரனுார் சென்று, பஸ் நிலையம், டீக்கடைகள், ஆட்டோ டிரைவர்களிடம், வாலிபனின் படத்தை காட்டி விசாரித்தனர்
தோழியிடம் விசாரணை சுவாதியுடன் பணியாற்றியோர், நண்பர்கள், தோழிகள் பலரையும் அழைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சுவாதிக்கு அறிமுகமான பெண் ஒருவர் கொடுத்துள்ள தகவல், கொலையாளியை எளிதில் பிடிக்க உதவும் என, போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அடையாளம் காட்டிய தோழி சுவாதிக்கு அறிமுகமான பெண் ஒருவரிடம் விசாரித்த போது, பயனுள்ள தகவல்கள் கிடைத்துள்ளன. அந்தப் பெண்ணுடன், 'ஃபேஸ்புக்'கில் பழகிய வாலிபன் ஒருவன், அவரிடம், ஆறு லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி உள்ளான். 'நீங்கள் வைத்துள்ள படத்தில் உள்ளவனும், என்னை ஏமாற்றியவன் போலத்தான் உள்ளான். அவன் தான், சுவாதியையும், ஏதோ, ஒரு வகையில் மிரட்டி உள்ளான்; கொலையாளி அவன் தான் என, அந்த பெண் தெரிவித்துள்ளார்.
தோழி பேட்டி இதேபோல் சுவாதியின் கொலையாளியை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நேரில் பார்த்ததாக மற்றொரு தோழி தெரிவித்துள்ளார். நான் சுவாதி வேலைபார்க்கும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில்தான் வேலை பார்க்கிறேன். சுவாதியை கொன்ற கொலைகாரனை நான் 2 நாட்கள் நேரில் பார்த்துள்ளேன்.
பின் தொடர்ந்த நபர் கடந்த 10ம் தேதியன்றும், 11ம் தேதியன்றும் நானும், சுவாதியோடு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தேன். அப்போது அந்த மர்மநபர் சுவாதியை பின்தொடர்ந்து வருவதை நான் பார்த்தேன். அந்த மர்மநபர் என்னை பின்தொடர்ந்து வருகிறான். ஏன் என்று தெரியவில்லை. அவன் என்னிடம் என்னை உனக்கு தெரியவில்லையா? என்று கேட்கிறான். ஆனால் உண்மையிலேயே அவனை எனக்கு யார் என்று தெரியவில்லை என்று சுவாதி என்னிடம் கூறினாள்.
கொடூர கொலை இந்த விஷயத்தை லேசாக விடக்கூடாது அவனை கண்டிக்க வேண்டும் என்று நான் சுவாதியிடம் எச்சரித்தேன். அதை பார்த்து கொள்ளலாம் என்று சுவாதி என்னிடம் கூறினாள். ஆனால் அவன் சுவாதியை இந்த அளவுக்கு கொடூரமாக கொலை செய்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த பாவியை கைது செய்து போலீசார் கடுமையான தண்டனை பெற்று தரவேண்டும் என்று சுவாதியின் தோழி தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறாராம்.
செல்போன் விபரங்கள் சுவாதியின் மொபைல் போனை, கொலையாளி பறித்துச் சென்று விட்டான். அந்த எண், தற்போது ஸ்விட் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் உள்ளது. இதனால், அதற்கான மாற்று எண்ணை பெற்றுள்ள போலீசார், முழுதகவல்களையும் சேகரித்து வருகின்றனர். அதில் உள்ள, வாட்ஸ் ஆப் தகவல்களை பெறவும் முயற்சிகள் நடக்கின்றன
பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லை கொலையாளி என கருதப்படுவனின் புகைப்படம், வீடியோ காட்சி ஆகியவை பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தாலும், அவனை பற்றி யாரும் தகவல் தெரிவிக்காதது போலீசாருக்கு பெரும் பிரச்னையாக உள்ளது.
உருப்படியாக சிக்கவில்லை கொலையில், துப்பு துலக்குவதற்காக, போலீசாரின் தொலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன. அதில் பலர் அழைத்தாலும், துப்புக் கிடைக்கும் வகையில் தகவல் எதுவும் இல்லை. 'வாட்ஸ் ஆப் மெசேஸ், சாட்டிங் விவரம் கிடைத்தால், அதில் கொலையாளி பற்றிய உறுதியான தகவல்கள் கிடைக்கலாம்.
நெருங்கி விட்டோம் வாட்ஸ் ஆப் செயலியை நிர்வகித்து வரும் அமெரிக்காவை சேர்ந்த, ஃபேஸ்புக் நிறுவனம், அதை, புலனாய்வு நிறுவனங்களுக்கு வழங்காது என்பதால், அந்த திசையிலும் போலீசார் மேற்கொண்டு நகர முடியவில்லை. எனினும் கொலையாளி பற்றிய முழு விவரங்களையும் பெற்றுள்ளோம்; அதை வெளிப்படையாக கூற முடியாது; கொலையாளியை நெருக்கி விட்டோம் என்று மட்டும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment