தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், சிதம்பரம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் பாக்கெட் கள்ளச் சாராய விற்பனை அதிகரித்துள்ளது. தமிழக சட்டசபைக்கு தேர்தல் நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரங்கள் இன்று மாலையுடன் ஓய்ந்தன. தேர்தலை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க இன்று முதல் அதாவது மே 14, 15, 16 ஆகிய தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 19-ந்தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதையொட்டி நேற்று இரவு கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. தொடர் விடுமுறையால் தேவையான மதுவை பலர் வாங்கிச் சென்றனர். அதேநேரத்தல் கூட்டத்தில் சரக்கு வாங்க முடியாமல் தவித்த பலர் பரிதாபத்தோடு ஏம்ப்பா கடையை அதற்குள் மூடுறீங்க என்றும் புலம்பினர். இருந்தபோதிலும் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்த மதுபானங்கள் வாங்கி பலர் பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் பாண்டிச்சேரியில் இருந்து சரக்கு தட்டுப்பாடு இல்லாமல் சப்ளை ஆகிறதாம். அதேநேரத்தில் சுற்றுப்புற கிராமங்களில் கள்ளச் சாராயம் விற்பனையும் படு ஜோராக நடக்கிறதாம். குடிமகன்கள் பலர் பாக்கெட் சாராயத்தை வாங்கிச் சென்று மறைவான இடங்களில் வைத்து அருந்துகின்றனர். முதல் நாள் விடுமுறைக்கே இந்த நிலைமை என்றால் இன்னும் இரண்டு நாட்கள் தாக்குப்பிடிக்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment