சென்னைக்கு தென்கிழேக்கே 120 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், நாளை காலை 5.30 மணிக்கு சென்னை அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு அருகே வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவடைந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த தாழ்வுமண்டலமாக தற்போது வழுவடைந்து சென்னைக்கு தென்கிழக்கே 120 கி.மீ மையத்தில் மையங்கொண்டுள்ளது. அது நாளை காலை 5.30 மணிக்கு சென்னை - ஆந்திரா இடையே கரையை கடக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்து செல்லும் போது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யும். சுமார் 25 செ.மீ. வரை மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும், மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 12 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து '1077' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்பையன் தெரிவித்துள்ளார். சென்னையை பொறுத்தவரை நகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மேலும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கிண்டி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், மயிலாப்பூர், பாரிமுனை, ராயபுரம், தரமணி, பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
No comments:
Post a Comment