சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழும் சம்பவங்கள் நீடித்து வருவதால், விமான நிலையத்தை ஆய்வு செய்ய மத்திய மந்திரி உத்தரவிட்டார்.
உடையும் கண்ணாடி
சென்னை விமான நிலையத்தை தரம் உயர்த்தும் மற்றும் நவீனமயமாக்கும் பணிகள் கடந்த 2013–ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டன. இந்திய விமான நிலையங்கள் ஆணையம் இப்பணிகளை செய்தது. இதற்காக, ரூ.2 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது.
ஆனால், 2013–ம் ஆண்டில் இருந்து சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுவது தொடர்கதையாகி வருகிறது. மேற்கூரை கண்ணாடிகள், கதவில் பொருத்தப்பட்ட கண்காடிகள் மற்றும் கிரானைட் பாளங்கள் ஆகியவை உடையும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த மாதம் மட்டும் 3 தடவை மேற்கூரை கண்ணாடி நொறுங்கி விழுந்துள்ளது. இதுவரை 63 தடவை இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளன.
இதுபற்றிய செய்திகள், பத்திரிகைகளில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ஆய்வு செய்ய உத்தரவு
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடையும் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்யுமாறு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி அசோக் கஜபதி ராஜு நேற்று உத்தரவிட்டார். செய்ய வேண்டிய பராமரிப்பு பிரச்சினைகளை முடிவு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆய்வுக்குப் பிறகு, குறைபாடுகளை உடனடியாக சரி செய்யுமாறும் அவர் விமான நிலையங்கள் ஆணைய உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment