‘2011- தேர்தலில் கிடைத்ததை விட இப்போது தி.மு.க.வுக்கு கிடைத்து இருப்பது பெரிய வெற்றியாகும்’ என்று தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் கூறினார்.
கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் வெற்றி
கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 37 ஆயிரத்து 730 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கொளத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி எஸ்.பி.கார்த்திகாவிடம் நேரடியாக வந்து பெற்றுக் கொண்டார். அவருடன் மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன் ஆகியோரும் வந்திருந்தனர்.
பின்னர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
தமிழக வரலாற்றிலேயே...
புதிதாக அமைந்துள்ள ஆட்சிக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். 2011-16-ல் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அப்போது அவர்கள் கொடுத்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்றாமல் இருந்ததோ, அதேபோல இந்த முறை யும் இருக்கக்கூடாது. இது என்னுடைய எண்ணம். மக்களுடைய உணர்வும் இதுதான்.
2011-ல் தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றியை விட இந்த முறை கிடைத்த வெற்றி பெரியதாகும். தமிழக வரலாற்றிலேயே, சட்டமன்ற வரலாற்றிலேயே இவ்வளவு பெரும்பான்மையுடன் எந்த கட்சியும் எதிர்க்கட்சியாக அமைந்தது இல்லை. இந்த வாய்ப்பை மக்கள் உருவாக்கி தந்திருக்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவகையில் நிச்சயமாக எங்கள் பணியை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
சி.பி.ஐ. விசாரணை
இதையடுத்து மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி:- சென்னையில் அதிக தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்று இருக்கிறதே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலத்தை சென்னை மக்கள் நன்றாக புரிந்திருக்கிறார்கள். அதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
கேள்வி:- 234 தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?
பதில்:- 234 தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா நடந்தது உண்மைதான். அதுகுறித்த செய்தி அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்து, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். அதைத்தான் தி.மு.க.வும் வலியுறுத்துகிறது. மேற்கண்டவாறு அவர் பதிலளித்தார்.
No comments:
Post a Comment