Latest News

  

கரூர் எஸ்.பி. வந்திதா கொலை முயற்சி விவகாரம்- ஆதாரங்களை அழிக்க சதி- கருணாநிதி திடுக் புகார்


வாக்காளர்களுக்கு தருவதற்காக அதிமுகவினர் பதுக்கிய பணத்தை பறிமுதல் செய்த கரூர் எஸ்.பி. வந்திதாவை சுட்டுக் கொல்ல முயற்சித்திருக்கும் சம்பவம் தனிநபர்களால் தமிழக காவல்துறைக்கு விடப்பட்டுள்ள சவால்; இதில் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதா? என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை: 

அ.தி.மு.க வைச் சேர்ந்த மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் முதலமைச்சரும்; தற்போதைய நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவரும், அவர்களுடைய அனைத்து விவகாரங்களையும் உடனிருந்து கவனித்து வருபவருமான கரூர் - அய்யம்பாளையத்தைச் சேர்ந்த அன்புநாதன் என்பவரின் வீடு மற்றும் கிடங்கு ஆகியவற்றில் சோதனை நடத்தியவர் கரூர் மாவட்டக் காவல் துறை பெண் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே என்பவராவார். அவர் நடத்திய சோதனையின் தொடர்ச்சியாக அதிர்ச்சியூட்டும் பல்வேறு தகவல்கள் வெளியாயின. இதுவரை மறைத்து வைக்கப்பட்டிருந்த இப்படிப்பட்ட தகவல்கள் வெளியுலகக் கவனத்தை ஈர்ப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் வந்திதா பாண்டே என்ற பெண்மணி ஆவார். ரெய்டுக்குப் பிறகு அவருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளி வந்திருக்கின்றன.

சுட்டுக் கொல்ல உத்தரவு இந்த நிலையில் நேற்று(26-04-2016) கரூர் எஸ்.பி. அலுவலகத்திற்கு ஒருவர் வேகமாக ஓடி வந்து எஸ்.பி.யைப் பார்க்க வேண்டுமென்று அவசரப்பட்டிருக்கிறார். மிகுந்த பதற்றத்தோடு காணப்பட்ட அவர், எஸ்.பி.யின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அந்த நபர் எஸ்.பி.யிடம் கொடுத்த பையில் துப்பாக்கி ஒன்று இருந்திருக்கிறது. அப்போது எஸ்.பி.யிடம் அந்த நபர், "உங்களைச் சுட்டுக் கொல்லும்படி முகமூடி அணிந்திருந்த இரண்டு பேர் தெரிவித்தனர். எஸ்.பி.யைச் சுட்டுக் கொன்றால் பத்து லட்சம் ரூபாய் தருகிறோம்; அப்படிக் கொல்லாவிட்டால் உன்னைச் சுட்டுக் கொன்றுவிடுவோமென்று மிரட்டினர். அதனால் நான் பயந்துவிட்டேன். என்னைக் காப்பற்றுங்கள்" என்று கூறி எஸ்.பி.யிடம் அந்த நபர் கதறி அழுததாகவும், அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் இன்று நாளேடுகளில் செய்தி வெளியாகியிருக்கிறது.

தற்கொலை முயற்சி என வதந்தி மேலும் எஸ்.பி. வந்திதா பாண்டே நேர்மையுடனும் துணிச்சலாகவும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் அவரைச் சுட்டுக் கொல்ல அனுப்பிய அதே நேரத்தில், வந்திதா பாண்டே தற்கொலைக்கு முயன்றதாக அன்புநாதனின் ஆதரவாளர்கள் திட்டமிட்டு வதந்தி ஒன்றைப் பரப்பியிருக்கிறார்கள். கரூர் - அய்யம்பாளையத்தில் ஏற்கனவே நடைபெற்ற சம்பவமும், நேற்று கரூர் எஸ்.பி.யைச் சுட்டுக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் சாதரணமான நிகழ்வுகள் அல்ல.

காவல்துறைக்கு விடப்பட்ட சவால் அய்யம்பாளையம் சம்பவம் இந்திய தேசக் கவனத்தை ஈர்த்திருக்கிறது. எஸ்.பி.யைக் கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தமிழக காவல் துறைக்கு, தனி நபர்கள் சிலரால் விடப்பட்டிருக்கும் மிகப் பெரிய சவாலாகும். எனினும் இந்த நிகழ்வுகளில் இதுவரை யாரும் கைது செய்யப் படாமல் இருப்பது வேடிக்கையாகவும் விநோதமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

கடும் கண்டனம் மது விலக்குப் பிரச்சாரம் செய்ததற்காக, பாடகர் கோவனைக் கைது செய்து சிறையில் அடைத்ததோடு, அவர் மீதும், மேலும் "மக்கள் அதிகாரம்" என்னும் அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் மீதும் தேச விரோத வழக்கு தொடர்ந்திருக்கும் ஜெயலலிதா அரசு; தொடர்பில்லாத சிலரிடமிருந்து எழுத்துப் பூர்வமான புகார் வந்திருப்பதாகச் சொல்லி, முதல் தகவல் அறிக்கை கூடத் தாக்கல் செய்யாமல், குற்றமேதும் புரியாதவர்களைக் கூட அவசரம் அவசரமாக, கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஜெயலலிதா அரசு; அய்யம்பாளையம் சம்பவத்தில் இதுவரை யாரையும் கைது செய்யாமல், கடும் குற்றவாளிகள் வெளியே சுதந்திரமாக உலா வருவதற்கும், குற்றங்கள் சம்பந்தமான ஆதாரங்களைக் காவல் துறையில் உள்ள சிலருடைய உதவியோடு மறைப்பதற்கும் அழிப்பதற்கும் அனுமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.


தக்க தீர்ப்பு வழங்குவர்... இந்திய நாட்டின் பொருளாதாரத்தையும் அதன் சட்ட விதி முறைகளையும் கேலிப் பொருளாக்கும் அய்யம்பாளையம் சம்பவம் போன்றவற்றின் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்து வரும் தேசிய அமைப்புகளின் அணுகுமுறை வேதனை அளிப்பதாகும். இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் பார்த்து அறிந்துகொண்டிருக்கும் நாட்டு மக்கள், உரிய நேரத்தில் தக்க தீர்ப்பினை வழங்குவதற்குச் சிறிதும் தயங்கமாட்டார்கள்; தயங்கவும் கூடாது! இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.