இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பெயரை தவறாகப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார். கட்சியின் பெயரை பாத்திமா முஸப்பர் போன்றோர் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அபூபக்கர் விடுத்துள்ள அறிக்கை:
அங்கீகரிக்கப்பட்ட கட்சி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகும். இதன்தேசிய தலைவராக முன்னாள் மத்திய இணையமைச்சர் இ. அஹமது எம்.பி., தேசிய பொதுச்செயலாளர், தமிழ் மாநில தலைவராக பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பொருளாளராக கேரள அமைச்சர் பி.கே. குஞ்ஞாலிகுட்டி ஆகியோர் செயல்படுகின்றனர்.
அரசியல் கட்சி: நாடாளுமன்ற உறுப்பினராக இ.டி. முஹம்மது பஷீர், மாநிலங்களவை உறுப்பினராக பி.வி. அப்துல் வகாப் ஆகியோரும், கேரள மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் 5 அமைச்சர்களையும், 20 சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்ட அரசியல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விளங்குகிறது.
திமுக கூட்டணியில் போட்டி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய தலைமையகம் காயிதே மில்லத் மன்ஸில், 36, மரைக்காயர் லெப்பைத்தெரு, சென்னை-600 001 என்ற முகவரியில் செயல்படுகின்றது. 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்று ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாத்திமா முஸப்பர்: இந்நிலையில் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவை திருமதி பாத்திமா முஸப்பர் மற்றும் குடும்பத்தினர் சந்தித்ததை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியோடு தொடர்பு படுத்தி அதிமுக தலைமை கழகத்தில் செய்தி வெளியிடப்பட்டு, அச்செய்தி 2.04.2016 அன்று மாலை பத்திரிகைகளில் செய்தியாக வந்துள்ளது.
அடிப்படை உறுப்பினர் கூட இல்லை: தாவூத் மியாகான் மற்றும் பாத்திமா முஸப்பர், தலைவர் என கூறிக்கொள்ளும் பஷீர் அஹமத்கான் ஆகியோர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை; அவர்கள் இக்கட்சியை பற்றி பேச எவ்வித அருகதையும் இல்லை என 03.03.2012 தேதிய தேர்தல் ஆணையம் அறிவிப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
ஜனநாயக மாண்புக்குப் புறம்பானது: இந்திய தேர்தல் ஆணையம் தெளிவாக அறிவிப்பு செய்தபின் அங்கீகரிக்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பெயரை தனி நபர்கள் தவறாக பயன்படுத்த ஊக்கமளிப்பது ஜனநாயக மாண்புக்கும், பத்திரிகை தர்மத்திற்கு முரணானதாகும்.
தேர்தல் ஆணையத்தில் புகார்: இது சம்பந்தமாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அவர்களுக்கு இன்று (02.04.2016) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment