ராஜீவ் காந்தி ராமராஜ்யம் மீது நம்பிக்கை வைத்து இருந்தவர், அவர் 2-வது முறையாக பிரதமராக இருந்திருந்தால் ராமர் கோவிலை கட்டி இருப்பார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். அடுத்த ஆண்டு ராமநவமி விழாவுக்கு முன்னதாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கப்படும். இதற்காக நான் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
ராமர் கோவில் கட்டுவது அவசியமானதா? அதை எப்படி கட்டுவது? என்ற தலைப்பில் கருத்தரங்கம் மும்பையில் நடந்தது. இதில் சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், முகலாய மன்னர்களால் அங்கிருந்த ராமர் கோவில் இடிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும். இதில், எந்தவித சமரசத்துக்கும் இடம் இல்லை. ராஜீவ்காந்தி 2-வது முறையாக பிரதமராக இருந்திருந்தால் அவர் ராமர் கோவிலை கட்டி இருப்பார். ராஜீவ் காந்தியை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் ராமராஜ்யம் மீது நம்பிக்கை வைத்து இருந்தார். ராமர் கோவில் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதை விரைவுபடுத்த வேண்டும். அதை தினமும் விசாரிக்க வேண்டும் என்று நான் எல்லா முயற்சிகளும் எடுத்து வருகிறேன். உச்சநீதிமன்றம் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:
Post a Comment