பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானதளத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வந்த குழுவில் இடம் பெற்றிருந்த தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரி அவரது சொந்த ஊரான உ.பி. மாநிலம் பிஜ்னூரில் அடையாளம் தெரியாத 2 பேரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட அதிகாரியின் பெயர் முகம்மது டான்ஸில். இவர் டெல்லியில் பணி நியமனம் செய்யப்பட்டு அங்கு பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு தனது சொந்த ஊரான பிஜ்னூரில் நடந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக தனது மனைவி, குழந்தையுடன் வந்திருந்தார்.
திருமணத்தை முடித்து விட்டு நள்ளிரவைத் தாண்டிய நிலையில், காரில் பிஜ்னூரில் உள்ள வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் முகம்மது சுதாரிப்பதற்குள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் முகம்மது ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அவரது மனைவியும் காயமடைந்தார். குழந்தை காயமின்றித் தப்பியது. இருவரையும் உடனடியாக நோய்டாவில் உள்ள கைலாஷ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு டான்ஸில் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவரது மனைவிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில்தான் பாகிஸ்தானிலிருந்து ஒரு குழு பதன்கோட்டுக்கு ஆய்வு செய்ய வந்திருந்தது. இந்த நிலையில் பதன்கோட் விசாரணைக் குழுவைச் சேர்ந்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது புயலைக் கிளப்பியுள்ளது. மேலும், பிஜ்னூரி்ல் தடை செய்யப்பட்ட சிமி அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரித்து வருகிறது. மேலும் சிமி அமைப்பினர் இங்கு 2014ம் ஆண்டு நடத்திய குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் டான்ஸீம் அகமது கொல்லப்பட்டுள்ளார். இருப்பினும் அகமது கொல்லப்பட்டதற்கான காரணத்தை உடனடியக கூற முடியாது என்றும் விசாரணைக்குப் பின்னரே இதுகுறித்துத் தெரிய வரும் என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment