Latest News

விஜய் மல்லையா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனைப் பெற்றுவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி வரைகடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள விஜய் மல்லையா, இங்கிலாந்து நாட்டுக்குத் தப்பி சென்றார். அவருக்கு எதிராக வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் மல்லையா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்து கணக்கை வருகிற 21-ந் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு உள்ளது. மேலும் செப்டம்பர் மாதத்துக்குள் ரூ.4 ஆயிரம் கோடி திருப்பி செலுத்தும் அவரது திட்டத்தையும் நிராகரித்து விட்டது. இந்த நிலையில் ஐ.டி.பி.ஐ. வங்கியில் இருந்து ரூ.900 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விஜய் மல்லையா மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக மும்பை அலுவலகத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு மல்லையாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அன்றைய தினம் அவர் ஆஜராகாததால், கடந்த 2-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் தான் ஏற்கனவே ஒப்பு கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால், இந்த விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என மல்லையா தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதை நிராகரித்த விசாரணை அதிகாரி 9-ந்தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராகுமாறு 3-வது முறையாக சம்மன் அனுப்பினார். நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவருக்கு அதிகபட்சமாக 3 முறை மட்டுமே சம்மன் அனுப்ப முடியும் எனவும், இதிலும் அவர் நேரில் ஆஜராகவில்லை என்றால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்த முறையும் மல்லையா நேரில் ஆஜராகவில்லை. வங்கிகளில் தான் பெற்ற கடனை திருப்பி செலுத்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் அமலாக்கத்துறை முன் நேரில் ஆஜராக இயலாது என விசாரணை அதிகாரிக்கு அவர் தெரிவித்துள்ளார். எனவே அடுத்த மாதம் வரை தனக்கு அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் மல்லையா. இந்நிலையில் 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத மல்லையாவின் பாஸ்போர்ட்டை ரத்துசெய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.