தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவை சேர்ந்தவர் முஹம்மது முகைதீன் இவரது மகன் ஆக்கிப் அஹமது ( வயது 17 ). திருச்சியில் உள்ள தனியார் மெட்ரிக். பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக கைப்பந்து விளையாட்டில் அதிக ஆர்வமாக விளையாடி இவர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில் இந்தோ - பூடான் ஊரக விளையாட்டு போட்டி, பிப்., 28ல், பூடானில் நடந்தது. தமிழகத்தைச் சேர்ந்த, 42 பேர் உட்பட, இந்தியாவின் சார்பில், 150 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 14, 17, 19 வயது மற்றும் 19 வயதிற்கு மேற்பட்டோருக்கான கபடி, குத்துச்சண்டை, மல்யுத்தம், கைப்பந்து போட்டிகள் நடந்தன.
இதில், கைபந்து போட்டி கடந்த பிப் 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் நடந்தது. 11 பேர் கலந்துகொண்ட இந்த விளையாட்டில் இந்தியா அணியோடு பூடான் அணி மோதியது. இந்தியா அணியின் சார்பில் ஆக்கிப் அஹமது கலந்துகொண்டு விளையாடினார். விறுவிறுப்பாக நடந்த போட்டியின் துவக்கத்தில் ( 2.25 நிமிடத்தில் ) முதல் சாட்டில் முதல் பாயின்ட் எடுத்து தனது அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றார். ஆட்ட இறுதியில் 16:3 என்ற செட் கணக்கில் இந்தியா அணி வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது.
இதையடுத்து இந்தியா ஊராக விளையாட்டு கூட்டமைப்பின் செயலர் பிரதிப் கட்டாரியா இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
பின்னர் தாயகம் திரும்பிய வீரர்களுக்கு தமிழ்நாடு ஊரக விளையாட்டு சங்க பொதுச்செயலர் மகேஷ்பாபு, பயிற்சியாளர் விஜயகாந்த், பள்ளி முதல்வர் எம்.ஏ முஹம்மது நியாஸ், சக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதிரை வரலாற்றில் ஒரு வீரர் பிற நாட்டிற்கு சென்று விளையாடி வெற்றி பெற்று பதக்கம் பெற்றது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிரை நியூஸ் ஆசிரியர் சேக்கனா நிஜாம் நேரில் சந்தித்து பாராட்டி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியா நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக வெற்றி வாகை சூடி பிறந்த ஊர் திரும்பி உள்ள கைப்பந்து வீரர் ஆக்கிப் அஹமது நம்மிடம் கூறுகையில்...
முதலில் இறைவனுக்கும், எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் எனது பெற்றோர், சகோதரர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கு எனது நன்றி.
கைப்பந்து போட்டியில் கடந்த 5 ஆண்டுகளாக தீவிர பயிற்சி பெற்றேன். எனக்கு ஊக்கம் தரும் வகையில் பயிற்சியாளர் விஜயகாந்த் தொடர்ந்து பயிற்சி அளித்து வந்தார். அரியலூரில் தேசிய அளவில் நடந்த கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று கோல்ட் மெடல் பெற்றது இந்த போட்டியில் விளையாட தகுதியை பெற்று தந்தது. எதிர்வரும் மே - ஜூன் மாதத்தில் தெற்கு ஆசியாவில் நடைபெற உள்ள சர்வேதேச போட்டியில் கலந்துகொண்டு விளையாட உள்ளோம். உள்ளூர் பள்ளிகளின் விளையாட்டில் கைபந்து விளையாட்டு போட்டியை கொண்டு வரவேண்டும். அதிகமான மாணவ மாணவிகள் இந்த போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும். இந்த விளையாட்டு போட்டி மூலம் கிடைக்கும் பாராட்டு சான்றிதழ் மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் இதர சலுகைகள் கிடைக்க மிகவும் உதவியாக இருக்கும்' என்றார்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment