Latest News

லோக்சபாவில் ஜெ.வை பாராட்டிய பியுஷ் கோயல் இப்போது குறை கூறுவது நாலாந்தர அரசியல்: நத்தம் விஸ்வநாதன்


லோக்சபாவில் முதல்வர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் பாராட்டி பேசிவிட்டு இப்போது சட்டசபை தேர்தலை மனதில் வைத்து குற்றம் சாட்டுவது சரியல்ல என்று மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல், கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசும்போது, நான் 28 மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களை எளிதில் அணுகி பேச முடிந்தது. ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஒருமுறை கூட சந்தித்து பேச முடியவில்லை" என்று கூறி இருந்தார்.

அதேபோல மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழக முதல்வரை பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் தொடங்குவது தொடர்பாக சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பொய்யானது என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று அறிக்கை வெளியிட்டார். மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல், பொன். ராதாகிருஷ்ணனுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். பொய்யான குற்றச்சாட்டை கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பியுஷ் கோயல் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து தமிழக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை : மத்திய மின்சாரம், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பியுஷ் கோயல் டெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் காற்றாலை மின்சாரம் தொடர்பான ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் தன்னிலை மறந்து, தனது பதவியின் மதிப்பையும் துறந்து, அரசியல் காரணங்களுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க இயலவில்லை என ஒரு பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்ததோடு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 'உதய்' திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு இன்னமும் கையொப்பம் இடவில்லை என தமிழக அரசை சாடியுள்ளார். மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த உதய் திட்டம் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் உண்மையிலேயே நன்மை பயக்கக்கூடிய திட்டம் தானா என்றால், இல்லை என்பதே அதற்கு ஆணித்தரமான பதிலாக அமையும். ‘மக்களுக்காகவே திட்டங்கள்; திட்டங்களுக்காக மக்கள் இல்லை' என்பதே தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணித்தரமான கருத்தாகும். உதய் திட்டம் எந்த அடிப்படையிலே வகுக்கப்பட்டது என்பதை தெரிந்து கொண்டால் இந்த திட்டம் ஏன் தமிழ்நாட்டிற்கு பயன் அளிக்காது என்பது எவருக்கும் எளிதில் புரிந்து விடும். அனைத்திந்திய அளவில் ஒரு புறம் மிக அதிக அளவிலான மின் உற்பத்தித் திறன் உள்ளது. ஆனால், அதே நேரத்தில் மின் பற்றாக்குறையும், மின்வெட்டும் பல மாநிலங்களில் உள்ளன. சுமார் 75,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் பயன்படுத்தப்படாமலேயே உள்ளது. இதற்குக் காரணம் பல்வேறு மாநிலங்களின் மின்பகிர்மானக் கழகங்களால் மின்சாரத்தை வாங்க இயலவில்லை. ஏனெனில், பெரும்பாலான மின் பகிர்மான கழகங்கள் பெரும் நஷ்டத்திலேயே இயங்கி வருவதால் அவைகளால் மின்சாரம் வாங்க இயலவில்லை. மேலும், வாங்கிய கடனுக்கான வட்டி மற்றும் தவணைத் தொகை ஆகியவற்றையும் செலுத்த இயலவில்லை. தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் வங்கிகளில் இருந்து பெற்ற கடன்களை அவர்களால் திரும்ப செலுத்த இயலவில்லை. ஏனெனில் அவர்களின் மின்நிலையங்கள் குறைந்த செயல் திறனிலேயே செயல்படுகின்றன. எனவே வங்கிகள் கடனாக வழங்கிய தொகை செயல்படாத சொத்தாக, அதாவது என்பிஏ என்று வகைபாடு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மின்பகிர்மான கழகங்களின் கடன்களை மாநில அரசு எடுத்துக் கொண்டால், அதிக கடன் பெறும் தகுதியினை மின்பகிர்மான கழகங்கள் பெற்று, அதன் காரணமாக தனியாரிடமிருந்து மின்கொள்முதல் செய்ய இயலும்; அவ்வாறு செய்யும்போது தனியார் மின் நிலையங்களின் பிஎல்எஃப் உயர்கின்ற காரணத்தினால் அவர்கள் லாபம் ஈட்டி வங்கிக் கடன்களை திரும்ப செலுத்த இயலும் என்பதே இந்த திட்டத்தின் அடிப்படை. இதன் காரணமாக இந்த திட்டத்தின் மூலம் உண்மையான பயன் பெறுபவர்கள் தனியார் மின் நிறுவனங்கள் மற்றும் அவர்களுக்கு கடன் வழங்கிய வங்கிகள் ஆகியவைகள் தான். மாநில அரசுக்கோ, நுகர்வோருக்கோ இதில் எந்த வித பயனும் ஏற்படப் போவதில்லை. இந்த திட்டம், "நீ அவலைக் கொண்டு வா, நான் உமியைக் கொண்டு வருகிறேன். இருவரும் சேர்ந்து ஊதி ஊதி அவலை சாப்பிடலாம்"என மத்திய அரசு, மாநில அரசுக்கு தெரிவிப்பது போலத் தான் உள்ளது. இந்த உதய் திட்டம் ஒரு தலைபட்சமாக அமையாமல், தனியாருக்கும் வங்கிகளுக்கும் லாபம், மாநில அரசுக்கும், மாநில மக்களுக்கும் நஷ்டம் என்ற அடிப்படையில் இல்லாமல், அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் எவ்வாறு மாற்றியமைக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை 23.10.2015 அன்றே எழுதியுள்ளார். இந்த கடிதத்திற்கு எந்த வித பதில் கடிதம் அனுப்ப இயலாத மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் அநாகரிகமான முறையில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். மின்பகிர்மான கழகங்களின் நிதி சீரமைப்பு தொடர்பாக மத்திய மின் துறையின் கூடுதல் செயலாளரின் 9.9.2015 நாளிட்ட கடிதத்தின் அடிப்படையிலும், மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதன் அடிப்படையிலும், இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்து விவாதிக்க எனது தலைமையில் ஒரு குழு அமைத்து ஜெயலலிதா உத்தரவிட்டார். அந்த குழுவில் தலைமைச் செயலர் மு.ஞானதேசிகன், கூடுதல் தலைமைச் செயலர்/நிதி மு. சண்முகம், அப்போதைய மின்துறை செயலர் ராஜேஷ் லக்கோனி மற்றும் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்சார வாரியம், முனைவர் ஆ. சாய்குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழு 9.10.2015 அன்று இந்த உதய் திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுடன் விவாதித்தது. உதய் திட்டத்தின்படி அ) மின் பகிர்மான கழகத்தில் 30.9.2015 நிலவரப்படி உள்ள கடனில் 75 விழுக்காட்டை மாநில அரசு இரண்டு ஆண்டுகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். முதல் ஆண்டில் 50 சதவீதக் கடன், இரண்டாம் ஆண்டில் 25 சதவீதக் கடன் மாநில அரசால் எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.

ஆ) மேற்கண்ட கடன் தொகை மாநில அரசின் நிதி பத்திரங்களாக வெளியிடப்பட்டு மாநில அரசின் கடனாக மாற்றப்படும். இந்த நிதிப் பத்திரங்களை வங்கிகள் வாங்கும். அதாவது, இதன் பொருள் என்னவென்றால், வங்கிகள் மாநில அரசுக்கு கடன் வழங்கி தங்களுடைய என்பிஏ கணக்குகளை நேர் செய்து விடும். இ) இந்த கடன்கள் மின் பகிர்மான கழகத்திற்கு மானியமாக 5 ஆண்டுகளில் மாநில அரசுகளால் வழங்கப்பட வேண்டும். ஈ) நிதிபற்றாக்குறை தொடர்பான நிதி பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை வரையறைகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் தளர்வு செய்யப்படும். அதாவது, 2016-17-ஆம் ஆண்டு முடிய மட்டுமே இந்த தளர்வு நடைமுறைப்படுத்தப்படும். ஜெயலலிதா விரிவாக விவாதித்து, அதன் அடிப்படையில் 23.10.2015 அன்று பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 2011 ஆம் ஆண்டு முதல் மின்வாரியத்திற்கு பங்கு மூலதனம், கடன்கள், மின் மானியம், நிதி சீரமைப்பு திட்டத்தின்படி நிதி பத்திரங்களை ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றின் கீழ் 53,328 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது பற்றியும் மேலும் மின்வாரியம் கடன் பெறுவதற்கு ஏதுவாக 46,000 கோடி ரூபாய் அளவில் அரசு ஈட்டுறுதி வழங்கியுள்ளது பற்றியும் தெரிவித்துள்ளார்கள். 2011 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மின் தொகுப்பில் 7485.50 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக சேர்க்கப்பட்டதன் காரணமாக அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. எனவே தான், முந்தைய திமுக ஆட்சியின் 2010-11 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின் வாரியத்தால் வழங்கப்படும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் 2 ரூபாய் 41 காசு என்ற அளவில் ஏற்பட்ட இழப்பு தற்போது 1 ரூபாய் 9 காசாக குறைக்கப்பட்டுள்ளது. உதய் திட்டம் ஒரு பயனுள்ள திட்டமாக இல்லாவிட்டாலும், இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று தெரிவிக்காமல், இதனை எவ்வாறு மாற்றியமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்து அவ்வாறு மாற்றியமைக்கப்பட்டால் இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். தமிழ்நாடு மின்வாரியம் வங்கிகளிலிருந்து பெற்றுள்ள 17,500 கோடி ரூபாய் கடனை முதற்கட்டமாக மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என உறுதி அளித்து அதற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய சில சலுகைகள் பற்றியும் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. மாநில அரசு பின் வரும் சலுகைகளை வழங்க மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது:- அ) மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் கடன்களின் அசல் மற்றும் வட்டியை திருப்பி செலுத்தும் காலங்களில் (15 ஆண்டுகளுக்கு) எஃப்ஆர்பிஎம் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும். ஆ) மாநில அரசு 15 ஆண்டுக்கால நிதி பத்திரங்களை (விடுமுறை காலம் 5 ஆண்டுகள் உள்ளடக்கி) வெளியிடவும் மற்றும் மாநில அரசு நிதி பத்திரத்தின் வட்டி தொகையை விட 20 அடிப்படை புள்ளிக்கு மிகாமல் வெளியிடவும் மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இ) முந்தைய மறு சீரமைப்புத் திட்டத்தைப் போலவே இந்த திட்டத்திலும் மாநில அரசு எடுத்துக் கொள்ளும் கடன் தொகையில் 25 சதவீதத்தை மத்திய அரசு மானியமாக வழங்க வேண்டும். ஈ) எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு 50 சதவீத நட்டத்தை சமாளிக்கும் பொருட்டு வங்கிகள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படவேண்டும். உ) எதிர்வரும் ஏழாவது ஊதிய குழுவின் நிதிச் சுமையையும் கணக்கிடும் பொருட்டு இந்த புதிய நிதி சீரமைப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கான கால அளவை ஒரு வருடம் என நிர்ணயிக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகள் எதற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இவற்றை ஏற்றுக்கொள்ள இயலாது எனில், அதற்கான காரணம் என்ன என்பதையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை. மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் ஒவ்வொரு மாநிலமாக சென்று அந்தந்த முதல்வர்களை சந்திக்க வேண்டும். எனவே, தமிழ்நாடு அரசு தெரிவித்த கருத்துகளுக்கு பதில் அளிக்க அவருக்கு நேரமில்லை! போகட்டும்! அவரது துறை அதிகாரிகளாவது பதில் கடிதம் அனுப்ப வேண்டுமா? வேண்டாமா? கடந்த 20.11.2015 ஆம் நாளில் மத்திய மின்துறையினால் வெளிடப்பட்ட ஆணையில் மாநில அரசுகளால் 2015-16 மற்றும் 2016-17 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ஏற்றுக்கொள்ளப்படும் கடன்கள் மட்டும் மாநிலத்தின் நிதி பற்றாக்குறை வரையறைக்கு கணக்கில் கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக 4.12.2015 அன்று மத்திய மின் அமைச்சகம் வெளியிட்ட வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மின் பகிர்மான நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டும் எரிபொருள் விலை உயர்வை சமாளிக்கும் வகையில் மின்கட்டண மாற்றம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணங்களை உயர்த்த வழிவகை செய்யும் இந்த உதய் திட்டம் தமிழக மக்களின் நன்மைக்கான திட்டமா? அல்லது தமிழக மக்களை அவதிக்குள்ளாக்கும் திட்டமா? இந்த உதய் திட்டம் மின் துறை சீரமைப்பு திட்டம் என்பது மக்களை ஏமாற்றும் செயல் ஆகும். தமிழ் இலக்கணத்தில் இடக்கரடக்கல் என ஒன்று உண்டு. அதாவது வெளிப்படையாக தெரிவிக்க கூச்சப்படுவதற்கு மாற்று மொழி தெரிவிப்பது என்பதே இதன் பொருள். அதே போன்று தான் மக்கள் வயிற்றில் அடிக்கும் திட்டம் என்று கூறாமல் மின் துறை சீரமைப்பு திட்டம் என இந்த திட்டம் சொல்லப்படுகிறது. இது உண்மையிலேயே அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய திட்டம் எனில், எதற்காக மத்திய அமைச்சர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று இதற்கு ஆதரவு திரட்ட வேண்டும்? இந்த திட்டம் தொடர்பாக மத்திய செய்தி தொடர்புத் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், ''வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனங்கள் அழுத்தம் காரணமாகவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. மின் பகிர்மான கழகங்களுக்கும், மாநில அரசுகளுக்கும், சாதாரண மக்களுக்கும் உண்மையிலேயே உதவ வேண்டுமென மத்திய அரசு கருதினால், மாநில மின்சார வாரியங்களுக்கு வழங்கப்படும் நிலக்கரியின் விலையை குறைத்திருக்க வேண்டும். நிலக்கரியை கொண்டு வருவதற்கான செலவினை குறைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்த பிறகு நிலக்கரிக்கான பசுமை வரியை டன் ஒன்றுக்கு ரூபாய் 51.50 லிருந்து 400 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு மின்சார வாரியம் கூடுதலாக செலவழிக்க வேண்டிய தொகை ஆண்டொன்றுக்கு 1,200 கோடி ரூபாயாகும். மின்சார வாரியம் இறக்குமதி செய்யும் நிலக்கரிக்கு 2.5 சதவீத சுங்க வரியும், 2 சதவீத Counter Vailing Duty-ம் விதிக்கப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் செலவிடும் தொகை 350 கோடி ரூபாய். நிலக்கரி கொண்டு வருவதற்கான ரயில்வே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டொன்றிற்கு 225 கோடி ரூபாய் தமிழ்நாடு மின்சார வாரியம் கூடுதலாக செலவிடுகிறது. இயற்கை எரிவாயுவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு மத்திய அரசின் கெயில் நிறுவனம் வழங்கி வரும் இயற்கை எரிவாயுவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 1 MMBTU எரிவாயுவின் விலையை

4.2 U.S.Dollar என்ற விலையிலிருந்து 5.05 U.S.Dollar என உயர்த்தியுள்ளது. இவ்வாறு விலை உயர்த்துவதுதான் மின் துறை சீரமைப்பா? தமிழ்நாடு மின்சார வாரியம் REC, PFC போன்ற மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களிலிருந்து கடன் பெறுகிறது. இந்த மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் வரி விலக்களிக்கப்பட்ட அதாவது, Tax Free Bond கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன. இவற்றுக்கு அவை வழங்கும் வட்டி வீதங்கள் 7.5 சதவீதத்திற்கும் குறைவே ஆகும். இது போன்று திரட்டப்படும் நிதியை குறைந்த வட்டி வீதத்திற்கு மின்சார வாரியங்களுக்கு வழங்கினாலே இவை கடனிலிருந்து மீண்டுவிட முடியும். அல்லது இது போன்ற வரிவிலக்களிக்கப்பட்ட கடன் பத்திரங்களை மாநில அரசு வெளியிட மத்திய அரசு அனுமதித்தால், குறைந்த வட்டி வீதத்திற்கு கடன் பெற இயலும். அவ்வாறெல்லாம் செய்யாமல் உதய் திட்டத்தின் மூலம் மாநில அரசை நிதி நெருக்கடிக்கு உள்ளாக்குவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள இயலும்? மத்திய அரசு செய்யூரில் அமைக்க உள்ள 4,000 மெகாவாட் அதி உய்ய அனல் மின்நிலையத்திற்கான நிலத்தை 2013-ஆம் ஆண்டே தமிழக அரசு வழங்கியுள்ளதே! இந்த திட்டம் இன்னமும் ஏன் துவங்கப்படவே இல்லை என்பதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளிப்பாரா? நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மையின் கீழ் வரையறைக்கு 2016-2017 ஆம் ஆண்டு முடிய மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்ட மாநிலங்கள் எவ்வாறு இன்னலுக்கு உள்ளாகியுள்ளன என்பதற்கு ராஜஸ்தான் மாநிலமே சிறந்த உதாரணமாகும். சமீபத்தில், பிரதமர் மோடி மாதம் ஒரு முறை மாநில தலைமைச் செயலாளர்களுடன் வழக்கமாக நடத்தும் காணொலி ஆய்வுக் கூட்டத்தில் டெல்லி-மும்பை தொழில்வழித் தடம் இன்னமும் ஏன் துவக்க இயலவில்லை என்ற கேள்விக்கு, ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளர், தங்களது மாநிலம் உதய் திட்டத்தில் பங்கேற்றுள்ளதால், தனி சரக்கு வழி திட்டத்திற்கு தேவையான செலவினத்தை தங்கள் மாநிலத்தால் மேற்கொள்ள இயலவில்லை என்பதால், இந்த திட்டத்திற்கான நிலம் வாங்க இயலவில்லை என தெரிவித்துள்ளார். எனவே தான், இது போன்று எழக்கூடிய பிரச்சனைகளை நன்கு உணர்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசு அளிக்க வேண்டிய சலுகைகள் பற்றி தனது கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்கள். 19.3.2015 அன்று லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டு தெரிவித்தார். இன்று எதிர்வரும் சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் தமிழ்நாட்டில் திட்டங்கள் செயல்படுத்த முடியும் என்று சொல்லியிருப்பது அப்பட்டமான நாலாந்தர அரசியல் தான் என்பது தெளிவாகும். மத்திய அரசால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள உதய் திட்டம் குறுகிய நோக்கம் கொண்ட திட்டம். தனியார் மின் நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் மட்டுமே பயன் அளிக்கக்கூடிய திட்டம். இரண்டு வருடங்களுக்கு மட்டுமே நிதி பற்றாக்குறை தொடர்பான நிதி பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை வரையறையிலிருந்து விலக்கு அளிப்பதால் பல்லாண்டுகளுக்கு எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தினையும் மாநில அரசால் மேற்கொள்ள இயலாது.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் மாற்றியமைக்கப்படவேண்டும் என்பதால், சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மிகுந்த துன்பதிற்கு உள்ளாவார்கள். எனவே இந்த திட்டத்தில் உள்ள குறைகளை எல்லாம் களைந்தால் தான் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தில் பங்கேற்க இயலும் என்பதே தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கருத்தாகும். இந்த திட்டத்தில் பங்கு பெறவில்லை என குறை கூறும் எதிர்கட்சியினர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணங்கள் மாற்றியமைக்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றனரா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினரை கேட்டுக் கொள்கிறேன்'' என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.