தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திமுக தலைவர் கருணாநிதி ஊர், ஊராக பிரச்சாரம் செய்ய ஏதுவாக அவருக்கென்று பிரத்யேகமாக ஒரு வாகனம் தயார் செய்யப்பட்டு வருகிறது. தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணியை முடிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. மேலும் இந்த கூட்டணிக்கு தேமுதிகவை வரவழைக்கும் முயற்சி நடந்து வருகிறது.
வயோதிகத்தால் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே அரசியல் பணிகளை கவனித்து வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி. வயதானாலும் சரி, சக்கர நாற்காலியும் கையுமாக இருந்தாலும் சரி திமுக பொதுக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார். தேர்தலையொட்டி அவர் ஊர், ஊராக சென்று மக்களை சந்தித்து வாக்கு கேட்க உள்ளார். இந்நிலையில் அவர் பிரச்சாரத்திற்காக ஒரு டெம்போ டிராவலரை வாங்கி அதில் சகல வசதிகளும் செய்ய கோவையில் உள்ள வாகன ரீமாடலிங் கம்பெனியான கோயாஸிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கோயாஸ் நிறுவன எம்.டி. பி.வி. ரியாஸ் தெரிவித்துள்ளார். கருணாநிதி வாகனத்தில் தனது சக்கர நாற்காலியில் அமர்ந்து வசதியாக பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த வாகனத்தில் அவரின் சக்கர நாற்காலியை ஏற்ற முடியும். வாகனத்தில் வை-பை, ஹோம் தியேட்டர், ஸ்பாட்லைட்டுகள், ஸ்பீக்கர்கள், மைக்ரோபோன், ஆம்ப்ளிஃபையர்கள் பொருத்தப்படுகின்றன. அவர் வாகனத்தில் செல்கையில் டிவியும் பார்க்க முடியும் என ரியாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment