Latest News

சாதிக் பாட்ஷா மரணத்துக்கு திமுகவே காரணம் - முடிந்தால் என் மீது வழக்கு போடுங்கள்: வைகோ ஆவேசம்


ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் விசாரிக்கப்பட்ட சாதிக் பாட்ஷாவின் மரணத்துக்கு திமுகதான் காரணம்; இதற்காக என் மீது முடிந்தால் வழக்கு தொடரட்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆவேசமாக கூறியுள்ளார். திருச்சியில் இன்று மக்கள் நலக்கூட்டணி சார்பில் வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் வைகோவுடன் வழக்கறிஞர்களான மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டுக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: என் மீது தி.மு.க வழக்கு தொடுத்திருக்கிறது. இதே போன்ற ஒரு ஊழல் குற்றச்சாட்டை 2006 சட்டசபை தேர்தலின் போது கூறினேன். அப்போது என் மீது அவதூறு வழக்கு தொடுத்தார்கள். வழக்கு தொடுத்தவர்கள் 10 ஆண்டுகளாக இழுத்தடித்துக்கொண்டிருக்கிறார்கள். என்மீது வழக்கு போட சொல்லி கருணாநிதி சொல்லியிருக்க மாட்டார். 2 ஜி வழக்கில் கனிமொழி பலி கடாவாக்கப்பட்டார். இதில் ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்தவர்கள் கருணாநிதி குடும்பத்தில் பதுங்கிக்கொண்டார்கள். சாகித் பால்வா (ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநர்) சென்னை வந்து மு.க. ஸ்டாலினை சந்தித்தபோது என்ன பரிமாற்றம் நடந்தது? கோடிக்கணக்கான ரூபாய் பணத்திற்கு டி.டி. கொடுக்கப்பட்டது என்கிறார்களே அது யாரிடம் கொடுக்கப்பட்டது. ஸ்டாலினுக்கும் சாகித் பால்வாவுக்குமான உறவை அவர்களால் சாகடிக்கப்பட்ட சாதிக் பாட்ஷா சி.பி.ஐ விசாரணையில் சொன்னார் என்பதாலேயே தூக்கில் தொங்கினார். சாதிக் பாட்ஷாவின் மரணத்தின் பின்னனி என்ன என்பதை சி.பி.ஐ ஒழுங்காக விசாரிக்க வேண்டும். சாதிக் பாட்ஷா நினைவு நாளில் 'சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா' என அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் குமுறியிருக்கிறார்கள். சாதிக் பாட்ஷாவின் மரணத்திற்கு தி.மு.க தான் காரணம் என நான் குற்றம் சுமத்துகிறேன். இதற்கு ஒரு வழக்கு போட்டுக்கொள்ளட்டும். இதற்கு வழக்கு போட வக்கில்லாத ஸ்டாலின், ஆத்திரத்தில் மனசு துடித்து போய் கூட்டணி பேரத்துக்கு வழக்கு போட்டிருக்கிறார். 2ஜி விவகாரத்தில் ஸ்டாலினுக்கும் பங்கிருக்கிறது என நான் சொல்கிறேன். இதற்கும் ஒரு வழக்கை போட்டுக்கொள்ளட்டும். இவ்வாறு ஆவேசமாக கூறினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.