Latest News

திமுக வென்றால் 92 வயது பலனை அடைவேன்: மா.செ.கூட்டத்தில் உருகிய கருணாநிதி


சட்டசபைத் தேர்தலில் வெற்றியை அறுவடை செய்து என்னிடத்திலே அந்த வெற்றிக் கொடியைக் காட்டுவீர்களேயானால் நான் ஏறத்தாழ 92 ஆண்டுகள் வாழ்ந்ததற்கான பயனை, அந்த வெற்றிக் கொடியைப் பார்த்தவுடன் நான் அடைய முடியும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி உருக்கமாக பேசியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, திமுக ஓர் அரசியல் கட்சி மட்டுமல்ல, சமுதாய இயக்கம். இந்த இயக்கத்தை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. இந்தக் கருத்தை வலியுறுத்தி பேச எனக்கும், பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் குரல் வளம் இல்லை. போகபோகச் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் உங்களிடம் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன் என்றார்.

இந்தக் கூட்டத்தில் பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, ஒவ்வொரு மாவட் டத்திலும் குறைந்தது 2 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதற்கான பொறுப்பை மாவட்டச் செயலாளர்கள் ஏற்க வேண்டும் என்றார். மாவட்டச் செயலாளர்களிடையே ஒரு போட்டி ஏற்பட்டால்தான் வெற்றி கிடைக்கும் என்பதற்காகவே அவர் அப்படிச் சொன்னார். தேர்தல் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும். இந்தத் தேர்தலில் நமக்கு கிடைக்கும் வெற்றி, அடுத்துவரும் தேர்தல்களுக்கு அடையாளமாக அல்லது தொடக்கமாக அமையவேண்டும் என்ற ஆர்வத்தில் ஸ்டாலின் அவ்வாறு குறிப்பிட்டார். அப்படி வெற்றி பெற்றுத் தர என்று எடுத்துக் கொள்ளாமல், நாம் நமக்காகப் பாடுபட வேண்டும். நமக்காக உழைத்திட வேண்டும். நமக்காக என்றால், நமக்கு நாமே என்பதைப் போல, அந்த உழைப்பு நமக்குத் தருகின்ற வெற்றி அடுத்தடுத்து வருகின்ற பல தேர்தல்களுக்கு அடையாளமாக, அல்லது தொடக்கமாக அமைய வேண்டும் என்கிற ஆர்வத்திலே தான் அவர் இங்கே பேசும் போது அந்த ஒரு கருத்தைச் சொன்னார்.

உங்களை மிரட்டுவதற்கோ, செய்யாவிட்டால் என்ன ஆகுமோ என்று பயப்படுவதற்கோ சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல. எனவே, அவர் கூறியதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு சிறிய மாவட்டங்களில் 2 தொகுதிகளிலும் பெரிய மாவட்டங்களில் 3 அல்லது 4 தொகுதிகளிலும் வெற்றியை பெற்றுத்தர வேண்டும். இதை நிச்சயம் உங்களால் செய்ய முடியும். இந்தத் தேர்தலில் வெற்றியை அறுவடை செய்து கொடுத்தால்தான் 92 ஆண்டுகள் வாழ்ந்ததற்கான பலனை நான் அடைய முடியும். எனக்கு குரல் வளம் இல்லை. நாள்தோறும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் அனைவருடன் பேசும் வகையில் குணமடைவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்தில் ஜாதி பேத மற்ற சமுதாயத்தை உருவாக்குவோம். ஜாதிகளை போற்றினால், புகழ்ந்தால் அந்த ஜாதியே நம்மை அழித்துவிடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஜாதி, மதமற்ற தமிழ்ச் சமுதாயத்தை, திராவிட சமுதாயத்தை கட்டிக் காக்க சபதம் ஏற்போம். இதே அரங்கத்தில் நீங்கள் எல்லாம் வெற்றி வீரர்களாக அமர்ந்திருக்கும் காட்சியை காண்பேன் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.