தேமுதிகவுடனான கூட்டணி விவகாரத்தில் திமுக தலைமையை மு.க.ஸ்டாலின் உதாசீனப்படுத்துகிறார் என்று மதிமுக பொதுச்செயலரும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் இது கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே சிண்டுமுடிகிற வேலையும் இல்லை என்றும் தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, தேமுதிக கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கையை இழக்கவில்லை; கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது எனக் கூறியிருந்தார். ஆனால் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிகவுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டதையே கருணாநிதி சுட்டிக்காட்டி பேசினார். ஆனால் புதியதாக எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை எனக் கூறியிருந்தார்.
இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியதாவது: தேமுதிகவுடனான கூட்டணி குறித்து கருணாநிதியும் ஸ்டாலினும் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இவர்களில் கூட்டணி குறித்து யார் சொல்வது உண்மை? திமுக தலைமையின் கருத்தை மு.க.ஸ்டாலின் உதாசீனப்படுத்துகிறார். இதைச் சொல்வதற்காக நான் சிண்டுமுடிகிறேன் என்று அங்கே புதிதாக வந்திருப்பவர்கள் சொல்வார்கள். இது சிண்டு முடிகிற வேலை இல்லை. தேமுதிகவுடனான கூட்டணி விவகாரத்தில் திமுகவுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது; திமுக தற்போது கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை. கருணாநிதியின் நிலை மிகவும் கவலையளிப்பதாக இருக்கிறது. மக்கள் நலக் கூட்டணிக்கு நாள்தோறும் ஆதரவு பெருகிவருகிறது. திமுக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு எதுவுமே இல்லை. இவ்வாறு வைகோ கூறினார்.
No comments:
Post a Comment