சட்டசபை தேர்தல் களம் பரபரப்பாக உள்ள நிலையில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நாளை தமிழகம் வருகை தர உள்ளார். இந்த பயணத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அமித்ஷா நேரில் சந்தித்து பேசமாட்டார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணியை அமைத்து போட்டியிடுவோம் என்று தமிழக பாஜக தொடர்ந்து கூறிவருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுடன் தேர்தலை சந்திப்போம் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி வருகிறார்.
ஆனால் பாமகவோ, அன்புமணி ராமதாஸை முதல்வராக ஏற்கும் கட்சியுடன்தான் கூட்டணி எனக் கூறியிருந்தது. பின்னர் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார். தேமுதிகவோ, தனித்துப் போட்டி தங்களது தலைமையில்தான் கூட்டணி என தெரிவித்திருக்கிறது. இருப்பினும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தமிழக பாஜக கூறி வருகிறது. இத்தகைய களேபரமான நிலையில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நாளை தமிழகம் வருகை தர உள்ளார். அவர் சென்னையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். இதன் பின்னர் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதே நேரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்திப்பது பற்றி அமித்ஷா எந்த ஒரு வார்த்தையும் சொல்லவில்லை என்கின்றனர் பாஜக நிர்வாகிகள். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏற்கனவே விஜயகாந்த்தை நேரில் சந்தித்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தார்; ஆனால் தேமுதிகவோ அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறிவிட்டது. இதனாலேயே விஜயகாந்த்தை சந்திப்பதை அமித்ஷா விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. தமிழக நிர்வாகிகளுடானா ஆலோசனைக்குப் பின்னர் சட்டசபை தேர்தல் நடைபெறும் கேரளாவுக்கு அமித்ஷா புறப்பட்டுச் செல்கிறார். இதனுடையே தாம் மீண்டும் சென்னைக்கு இந்த வாரம் வர இருப்பதாக தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment