திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துள்ளது. திமுக தரப்பில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்காக ஸ்டாலின் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மேலிடமும் விரைவில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கான குழுவை அறிவிக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் கூறியிருந்தார். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழக சட்டசபை தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக 8 பேர் கொண்ட குழுவை அறிவித்தார். இந்த குழுவில் ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, கோபிநாத், கிருஷ்ணசாமி, யசோதா, திருநாவுக்கரசர், தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த அறிவிப்பால் விரைவில் திமுக- காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கூட்டணியில் தேமுதிக இணைந்தால் காங்கிரஸ் கட்சிக்கு 25; இணையாவிட்டால் 30 தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது; ஆனால் காங்கிரஸ் கட்சியோ 30 முதல் 50 தொகுதிகள் வரை எதிர்பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment