தேரி அமைப்பின் துணை தலைவர் ஆர்.கே. பச்சோரி மீதான பாலியல் வழக்கில் 1400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை டெல்லி போலீசார் தாக்கல் செய்துள்ளனர். ஐ.நா. பருவநிலை மாற்ற குழுவின்(ஐபிசிசி) தலைவராக இருந்தவர் ஆர்.கே. பச்சோரி(75). அவர் எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவன(டிஇஆர்ஐ) தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29 வயது பெண் ஒருவர் பச்சோரி மீது டெல்லி போலீசில் பாலியல் புகார் அளித்தார்.
தான் தேரி அமைப்பில் 2013ம் ஆண்டு சேர்ந்ததில் இருந்து பச்சோரி தனக்கு பாலியல் தொல்லை அளித்தார், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்ஆப் மூலம் ஆபாசமாக மெசேஜ் அனுப்பினார் என்று தனது புகாரில் அந்த பெண் தெரிவித்திருந்தார். இதையடுத்து போலீசார் பச்சோரி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் ஷிவானி சவுகானிடம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 1400 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் அரசுத் தரப்பில் 23 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர், தேரி நிறுவனத்தில் பணியாற்றிய தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள் ஆவர். இந்த குற்றப்பத்திரிகை ஏப்ரல் 23-ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment