கரூரில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக காமெடி நடிகர் சிங்கமுத்து, விஜயகாந்திற்கு முதல்வராகும் தகுதியே கிடையாது என்று காட்டமாக கூறினார். முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கரூர் நகர அ.தி.மு.க சார்பில் கரூர் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகில் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் பேசிய நடிகர் சிங்கமுத்து, "சென்னைவாசிகள் மகிழ்ச்சியாக தங்கள் வேலைகளை பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்களே. அதேபோன்று தமிழகத்தில் நாலைந்து பேர் ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்லி ஒன்று இரண்டு ஓட்டாவது வாங்கிவிடலாம் என துடிக்கிறார்கள். விஜயகாந்த் என்ன பேசுகிறார் என யாருக்கும் புரிவதில்லை. அவர் பேசுவது என்னவென்று அவருக்கே தெரியாது. முதல்வராகும் தகுதி அவருக்கு கிடையாது. மக்களும் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மதுவிலக்கு பற்றி பேச விஜயகாந்துக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?. இந்த தேர்தலோடு விஜயகாந்த் ஓடிபோய்விடுவார். வைகோ பேசி பேசி பல் தேஞ்சதுதான் மிச்சம். ஒன்றும் சாதிக்க முடியாது. தி.மு.க. ஏற்கனவே முடிந்து போன கதை. முதல்வர் ஜெயலலிதா பெண்கள் மீது அதிக அக்கறை கொண்டு தாலிக்கு தங்கம், மிக்சி, கிரைண்டர் மின்விசிறி போன்ற எண்ணற்ற திட்டங்களை தந்தார். 2016 ல் அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்று முதல்வர் ஜெயலலிதா மீண்டும் அரியணை ஏறுவார்" என்று பேசினார். கடந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவோடு, அதிமுக கூட்டணி வைத்திருந்தது. அப்போது மேடைகளில் விஜயகாந்த்தையும் புகழ்ந்து பேசி பிரசாரம் செய்தார் சிங்கமுத்து. மேலும் விஜயகாந்த்தை விமர்சனம் செய்து பேசிய வடிவேலுவையும் கடுமையாக திட்டி வந்தார். ஆனால் தற்போது விஜயகாந்த்தைத் திட்டும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். அது வேற வாயி.. இது நாற வாயி கதைதான்!
No comments:
Post a Comment