மத்திய ரயில்வே பட்ஜெட் 25ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்யவுள்ள இந்த பட்ஜெட்டில் ரயில் பெட்டிகளின் நிறமாற்றம் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படவுள்ளன. மேலும் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களைக் குறி வைத்தும் பல அறிவிப்புகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரயில்வே தற்போது நிதி நெருக்கடியில் உள்ளதால், பயணக் கட்டண உயர்வு கண்டிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 5 முதல் 10 சதவீத அளவிலான கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம். கடந்த வருடம் பயணிகள் மற்றும் சரக்குக் கட்டண வருவாய் குறைந்து விட்டது. மேலும் 7வது ஊதியக் கமிஷன் பரி்ந்துரையை வேறு அமல்படுத்த வேண்டியிருப்பதால் கூடுதலாக ரூ. 32,000 கோடி நிதிச் சுமையை ரயில்வே சந்தித்துள்ளதாம். இதைச் சமாளிக்க மக்களின் தலையில் கட்டண உயர்வை ஏற்ற ரயில்வே திட்டமிட்டுள்ளது.
கை வைத்த நிதியமைச்சகம் இதற்கிடையே, 2015-16ம் ஆண்டுக்கான ரயில்வே துறைக்கான ஒட்டுமொத்த நிதி ஆதரவு ஒதுக்கீட்டை நிதியமைச்சகம் ரூ. 8000 கோடி குறைத்து விட்டது. அதிக அளவில் நிதியைச் செலவிடாமல் இருந்ததால் இந்த நடவடிக்கையை நிதித்துறை எடுத்தது.
எல்லாவற்றையும் சமாளிக்க இப்படி சுற்றிலும் பல சிக்கல்கள் சூழ்ந்து நிற்பதால் கட்டண உயர்வு கண்டிப்பாக அவசியம் என்று ரயில்வே துறை கருதுகிறதாம். இருப்பினும் பயணிகள் கட்டணத்தை முடிந்தவரை அதிகம் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ளவும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு திட்டமிட்டிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏசி கட்டணங்கள் உயரலாம் இப்போதைய நிலையில் ஏசி பெட்டிகளுக்கான கட்டணம் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. இதனால் அதிக அளவிலான பாதிப்பை மக்கள் சந்திக்க மாட்டார்கள் என்பது ரயில்வேயின் கணிப்பு.
சரக்குக் கட்டணம் கண்டிப்பாக உயரும் அதேபோல சரக்குக் கட்டணமும் கண்டிப்பாக உயர்த்தப்படும். இதுவும் கணிசமான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இதை அரசு கொண்டு வரும் என்று தெரிகிறது.
பயணிகள் கட்டண வசூல் இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் பயணிகள் கட்டணம் மூலம் கிடைத்த வசூல் 1,36,079.26 கோடி ஆகும். ஆனால் வசூலிக்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கோ 1 கோடியே 41 லட்சத்து 416 கோடி ஆகும். பற்றாக்குறை 3.77 சதவீதமாகும். புதிய வண்ணம் இதற்கிடையே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை முற்றிலும் மாற்றியமைக்கும் திட்டமும் ரயில்வேயிடம் உள்ளது. அதாவது பழைய பெட்டிகளுக்குப் புதிய வண்ணத்திலான பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அனுபூதி பெட்டிகள் மேலும் இந்த ரயிலில் அனுபூதி வகை பெட்டிகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. மேலும் இந்த ரயில்களில் பல்வேறு விதமான வசதிகளும் புதிதாக ஏற்படுத்தப்படவுள்ளன.அதி வேகத்தில் செல்லும் மேலும் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய வகையில் இந்த ரயிலில் நவீன மேம்பாடுகளும் திட்டமிடப்பட்டுள்ளன. அவையும் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்.
தமிழகத்திற்கு விமோச்சனம் கிடைக்குமா? தமிழகத்தைப் பொறுத்தவரை பல திட்டங்கள் நிலுவையில் உள்ளன. பல கிடப்பில் போடப்பட்டு விட்டன. பல என்னவாயிற்று என்றே தெரியவில்லை. இது போக பல கோரிக்கைளும் உள்ளன. அவையெல்லாம் என்னாகும் என்று தெரியவில்லை. இருப்பினும் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் மக்களுக்கு சந்தோஷம் தரும் வகையிலான அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று நம்புவோம்.
நெல்லை மாவட்ட கோரிக்கைகள் நெல்லை மாவட்டம் ராதாபுரம் மற்றும் நான்குநேரி தாலுகாவில் உள்ள ஐந்து லட்ச மக்கள் ரயில் போக்குவரத்துக்கு வள்ளியூர் மற்றும் நான்குநேரி ரயில் நிலையத்தையே நம்பி உள்ளனர். இந்த ரயில் நிலையங்கள் திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்ப்பட்டு வருகிறது. இதனால் இந்த ரயில் நிலையங்கள் கோட்ட அதிகாரிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த தாலுகா பயணிகள் வேலைவாய்ப்பிற்காகவும், மேற்கல்விக்காகவும், வணிக சம்மந்தமாகவும் தினசரி ஆயிரகணக்காகவர்கள் பயணிக்கின்றனர்.
ரயில் வசதி இல்லை இந்த தாலுகாவில் உள்ள பொதுமக்கள் தங்கள் மாவட்ட தலைநகரான திருநெல்வேலியில் உள்ள மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்துக்கு தினசிரி அலுவலக பணிக்காகவும், திருநெல்வேலியில் உள்ள கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி சம்மந்தமாகவும் மற்றும் பல்வேறு பணிகள் நிமித்தம் திருநெல்வேலிக்கு பயணிக்கின்றனர். வள்ளியூரிலிருந்து காலை 8:10 மணிக்கு நாகர்கோவில் - கோவை பயணிகள் ரயிலை அடுத்து மாலை 6:15 மணிக்கு தான் திருநெல்வேலி, மதுரை மார்க்கம் கன்னியாகுமரி - சென்னை தினசரி ரயில் வசதி உள்ளது. இதைபோல் மறுமார்க்கம் மதுரை, திருச்சியிலிருந்து அதிகாலையிலிருந்து மதியம் வரை எந்த ஒரு தினசரி ரயில் வசதியும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.
பகலில் ஒரு ரயிலும் கிடையாது பகல் நேரங்களில் சுமார் 10 மணி நேரம் இரண்டு மார்க்கங்களிலும் எந்த ஒரு தினசரி ரயிலும் இல்லாதததால் வள்ளியூர் ரயில் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. திருநெல்வேலி - நாகர்கோவில் ரயில்வழித்தடம் 02-04-1981-ம் ஆண்டு துவங்கப்பட்டு இன்றுவரை 33 ஆண்டுகளாக பகலில் பத்து மணிநேரம் ஒரு தினசரி ரயில் கூட இயக்காமல் இந்தவழித்தடம் உள்ளது. பல கோடிகள் செலவு செய்து ரயில் வழித்தடம் அமைத்தும் கூடுதல் ரயில்கள் இயக்காமல் இருப்பது எந்த காரணத்துக்காக ரயில்வழித்தடம் அமைக்கப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறாமலே உள்ளது. ரயில்வே துறை அதிகாரிகள்இந்த தடத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த பகுதி பயணிகள் விரும்புகின்றனர்.
நாகர்கோவில் டூ மதுரை நாகர்கோவிலிருந்து மதுரை மார்க்கம் ஒர் ரயில் இயக்கப்பட்டால் இந்த ரயில் நெல்லை மாவட்டத்தின் வள்ளியூர், நான்குநேரி, திருநெல்வேலி போன்ற முக்கிய பகுதிகளை கடந்தே செல்கிறது. இவ்வாறு இயக்கப்படுவதால் நெல்லை மாவட்டத்தின் வள்ளியூர், நான்குநேரி போன்ற பகுதிகளுக்கு நெரடியாக ரயில் வசதி கிடைக்கிறது. தமிழகத்தின் குமரி மற்றும் நெல்லை மாவட்ட ரயில்வழித்தடங்கள் அணைத்தும் திருவனந்தபுரம் கோட்டத்தில் இருப்பதாலேயே இந்த தடத்தில் புதிய ரயில்கள் இயக்க கோட்ட அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை என்ற கருத்து இந்த பகுதி மக்களிடம் பரவலாக உள்ளது.
திருச்சி – திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயில் திருச்சியிலிருந்து மதுரை வழியாக திருநெல்வேலிக்கு பகல் நேர தினசரி இன்டர்சிட்டி ரயில்இ யக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திருச்சியிலிருந்து காலையில் 7:15க்கு புறப்பட்டு திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்ப்பட்டி, வாஞ்சி மணியாச்சி வழியாக மதியம் 1:00 மணிக்கு திருநெல்வேலி வந்து சேர்ந்து மதியம் திருநெல்வேலியிருந்து 2:15க்கு புறப்பட்டு இரவு திருச்சிக்கு 8:00 மணிக்கு செல்கிறது. இந்த ரயில் பகல்நேர ரயிலாக இருப்பதால் ராதாபுரம் மற்றும் நான்குநேரி தாலுகா வியாபாரிகளுக்கு மதுரை, விருதுநகர் சந்தையிலிருந்து சரக்கு போக்குவரத்துக்கு மிகவும் பயனள்ளதாக இருக்கும். இந்த ரயிலை ராதாபுரம் மற்றும் நான்குநேரி தாலுகா மக்களின் நலன் கருதி திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்குமாறு ராதாபுரம் நான்குநேரி தாலுகா ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கபட்டுள்ளது.
குறைந்தபட்சம் ஒரு ரயிலாவது நெல்லையிலிருந்து இயக்கப்பட்டு வரும் ரயிலை கேரளாவுக்கு நீட்டிப்பு செய்து இயக்கும் போது அங்கிருந்து குறைந்தபட்சம் ஒர் ரயிலாவது நெல்லைக்கு நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இவ்வாறு நீட்டிப்பு செய்து இயக்குவதாக இருந்தால் நெல்லை மாவட்ட பயணிகளுக்கு பயன்படும் வகையில் மங்களுர் ரயில் மற்றும் மும்பை ரயிலை நெல்லைக்கு நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.
திருவனந்தபுரம் - மங்களுர் ரயில் நெல்லை வரை நெல்லை மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் பல்வேறு பணிகள் நிமித்தம் பயணிக்கின்றனர். இவ்வாறு பயணம் செய்பவர்களுக்கு தினசரி ரயிலாக குருவாயூர் ரயில் மட்டுமே உள்ளது. இந்த ரயிலும் கேரளாவின் வடபகுதிகளுக்கு செல்லாது. ஆனால் கேரளாத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து மங்களூருக்கு மூன்று தினசரி இரவு நேர ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் ஒரு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருநெல்வேலி – மும்பை தினசரி ரயில்:- திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து மும்பைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கோரிக்கை வலுத்து வருகிறது. இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பை விளங்குகிறது. தமிழகத்திலிருந்து மும்பைக்கு தினசரி ஆயிரகணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். குறிப்பாக தென் தமிழகத்திலிருந்து மும்பையில் பல்வேறு தொழில்கள் சம்மந்தமாகவும், வியாபாரம் செய்யவும் தமிழர்கள் லட்சக்கணக்கானவர்கள் வசித்து வருகின்றனர்.
எர்ணாகுளம் வழியாக தமிழகத்திலிருந்து (சென்னை தவிர) மும்பைக்கு குறைந்த அளவே ரயில்கள் இயக்கபட்டு வருகிறது. தற்போது நெல்லையிலிருந்து திருவனந்தபுரம், எர்ணாகுளம், மும்பை வழியாக ஹாப்பாவுக்கு இயக்கப்பட்டுவரும் ரயில் மிகக்குறைந்த பயணநேரத்தில் செல்வதால் மிகவும் பிரபலம் ஆகும். ஆகவே இந்த தடத்தில் தினசரி ரயில் இயக்க வேண்டும். தற்போது கொச்சுவேலியிலிருந்து மும்பை லோகமான்யதிலக் ரயில் நிலையத்துக்கு வாரத்துக்கு இரண்டுநாள் செல்லத்தக்க வகையில் சூப்பர்பாஸ்ட் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து தினசரி ரயிலாக மாற்றம் செய்து இயக்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா...?


No comments:
Post a Comment