மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கனவு கண்ட தமிழகத்தை உருவாக்குவதற்காக, அப்துல்கலாம் லட்சியக் கட்சி என்ற புதிய கட்சியை அவரது ஆலோசகர் பொன்ராஜ் ராமேஸ்வரத்தில் இன்று தொடங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தோணுகால் கிராமத்தில் நேற்று அரசியலுக்கான அழைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாற்றத்துக்கான இளைஞர் கூட்டமைப்பு மற்றும் விஷன் 2020 அமைப்பைச் சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவர் - மாணவிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளது. தரமான கல்வி இல்லை. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். எனவே, ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும், ஒழுக்கமான நம்பிக்கைக்கு உரிய தலைமைப் பண்பு கொண்டவர் தலைமையேற்க வேண்டுமென மாற்றத்துக்கான இளைஞர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
அரசியலில் இறங்குகிறேன்... அதனைத் தொடர்ந்து கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் பேசினார். அப்போது அவர், ‘கலாமின் கொள்கையான தரமான கல்வி அமைய வேண்டும். தொழில் முன்னேற்றமடைய வேண்டும். இதற்காக பல்வேறு திட்டங்களை வகுக்க வேண்டும். எனவே இளைஞர்களுடைய கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அரசியலில் இறங்குகிறேன்.
கட்சிப் பெயர் அறிவிப்பு... லஞ்சம், ஊழலற்ற அரசை உருவாக்க நான் அரசியலுக்கு வருகிறேன். ராமேசுவரம், பேய்க்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) பிற்பகல் 3 மணிக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், புதிய கட்சியின் பெயர், கொடி அறிவிக்கப்படும். இதையடுத்து தேர்தல் பிரசாரம் தொடங்கப்படும்' என்றார். மாற்றத்திற்காக உழைப்போம்... இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்திலும் பொன்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘அன்பு நண்பர்களே, பரிபூரண மாற்றத்தை நிகழ்த்துவதற்காக இன்று முதல் உழைப்போம். 5 வருடம் ஆகலாம், 10 வருடம் ஆகலாம், 15 வருடம் ஆகலாம் - அது முக்கியமல்ல. வளர்ந்த தமிழ்நாட்டை அடைவதற்கு டாக்டர் கலாம் அவர்கள் கனவு கண்ட லட்சியத்தின் மூலம், நம் முயற்சியை இன்று ஆரம்பிப்பதுதான் முக்கியம். வாழ்க தமிழகம். வளர்க தமிழ் இனம். வாழ்க டாக்டர் அப்துல் கலாம் புகழ்' எனத் தெரிவித்துள்ளார்.
அப்துல்கலாம் லட்சிய கட்சி... இந்த அறிவிப்பின் படி இன்று தனது புதிய கட்சியின் பெயரை பொன்ராஜ் அறிவித்துள்ளார். தங்களது புதிய கட்சிக்கு அப்துல்கலாம் லட்சியக்கட்சி என அவர்கள் பெயரிட்டுள்ளனர். சகாயம் ஆதரவாளர்கள்... இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே இதில், நேர்மையான அதிகாரி என மக்கள் மத்தியில் பேர் பெற்ற சகாயம் ஐஏஎஸ்-ஐ தமிழக முதல்வராக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்கள் சேர்ந்து ஒரு இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.
புதிய கட்சி... இந்நிலையில், இந்தியாவை வல்லரசாகக் வேண்டும் என கனவு காணச் சொன்ன, மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆதரவாளர்கள் இணைந்து புதிய கட்சியைத் தொடங்கியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment