மத்திய அரசின் பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த தகவல் இடம்பெறாதது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்தியா தனது பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ஒதுக்கும் செலவீனங்களை அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. எனவே பட்ஜெட்டில் ராணுவத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனிக்கும்.
மிக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் வேளைகளில், அதுகுறித்து பாகிஸ்தான் விமர்சனம் செய்த நிகழ்வுகள் கூட அரங்கேறியுள்ளன. ஆனால், ஆச்சரியமான ஒரு விஷயம் என்னவென்றால், 2016-17ம் நிதியாண்டு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பாதுகாப்பு துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை பட்ஜெட் உரையில் தெரிவிக்கவில்லை. 2009-10ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.1,41,781 கோடி, 2010-11 பட்ஜெட்டில் ரூ.1,47,377 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்த பட்ஜெட் செலவீனத்தில் ராணுவத்திற்கு மட்டும் 13.88 சதவீதத்தை 2015-16 நிதியாண்டு பட்ஜெட்டில் ஜெட்லி ஒதுக்கியிருந்தார். இந்நிலையில், இவ்வாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறித்து எந்த தகவும் வெளியிடப்படவில்லை. பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரையில், ராணுவத்திற்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது. குறிப்பிட்ட சதவீத நிதியை ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்வதை கட்டாயமாக்கி அறிவிப்பு வெளியிட வேண்டும், அதன் மூலம், வருடந்தோறும், அதில் நிலவும் ஏற்றத்தாழ்வை கட்டுப்படுத்தலாம் என பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. காரணம் என்ன?: ஒரு ரேங்க், ஒரு பென்சன் கோரிக்கையை அமல்படுத்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கோரிக்கை விடுத்து போராட்டங்கள் நடத்தி வந்தனர். அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அரசுக்கு அதிக செலவு பிடிக்கும். பிற திட்டங்களுக்கு அதிகமாக செலவிட முடியாது. அதேநேரம், பென்சன் திட்டத்திற்கு நிதியை ஒதுக்காமல் விட்டாலோ, அல்லது, குறைத்து ஒதுக்கினாலோ மீண்டும் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, ராணுவத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அரசு வெளிப்படுத்தவில்லை என தெரிகிறது. அதேநேரம், பட்ஜெட்டில் அறிவிக்காத திட்டங்களுக்கு நிதி பெற முடியாது என்பதால் துணை மானிய கோரிக்கையின்போது, ராணுவத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை சேர்த்து, நிதியை பெற்றுக்கொள்ள பாதுகாப்பு அமைச்சகம், நிதி அமைச்சகம் திட்டம் வைத்திருக்கலாம் என தெரிகிறது. துணை மானிய கோரிக்கையை பொறுத்தளவில், எவ்வளவு நிதி, எந்த திட்டத்திற்கு செல்கிறது என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டி வராது என்பதால் தப்பிவிடலாம் என்று அரசு நினைப்பதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment