எந்த உடை அணிவது, எப்படி அணிவது, எந்த மாதிரியாக அணிவது என்பதை அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டுமே தவிர, அதில் மூக்கை நீட்டுவதற்கு இந்துத்வா சக்திகளுக்கு அதிகாரம் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆங்கில புத்தாண்டு தின கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டுமென்பதை முடிவு செய்யும் வகையில் இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மேற்கத்திய கலாச்சார தாக்கத்தால் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்கு ஏதுவாக நள்ளிரவில் ஆலயங்களை திறப்பது ஆகம விதிகளுக்கு புறம்பானது என்று அவர் கூறியிருக்கிறார். ஆலய வழிபாடு என்பது ஆகம விதிகளின் அடிப்படையில் தான் நடக்க வேண்டுமென்றுச் சொன்னால் அங்கே ஜாதி, இன வேறுபாடுகளுக்கு இடமிருக்க முடியாது. குறிப்பிட்ட ஜாதியினர் தான் அர்ச்சகராகலாம் என்பதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மேலும் கோயில் வழிபாட்டிற்கு செல்பவர்கள் ஆடை கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும், குறிப்பாக ஜீன்ஸ், சுடிதார் போன்ற உடைகளை அணிந்து கொண்டு ஆலயங்களுக்குள் வழிபாடு செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்கக் கூடாது என்றும் இராம கோபாலன் கூறியிருக்கிறார். இந்து அறநிலையத்துறைக்கு ஆணை பிறப்பிக்கும் வகையில் கருத்து கூறுவதற்கு இராம கோபாலனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இந்து முன்னணியின் தலைவராக இருப்பவர் எப்போது இந்து மதத்தின் தலைவராக மாறினார்? இந்து மதம் என்பது ஒரு குறிப்பிட்ட ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதல்ல. இந்து மதத்தின் சிறப்பே எதையும் சகித்து, உள்வாங்கி ஏற்றுக் கொள்வது. அந்த வகையில் ஆலய வழிபாட்டிற்குச் செல்கிற ஆண்களுக்கோ, பெண்களுக்கோ உடைக் கட்டுப்பாடுகள் விதிப்பதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த உடை அணிவது, எப்படி அணிவது, எந்த மாதிரியாக அணிவது என்பதை அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டுமே தவிர, அதில் மூக்கை நீட்டுவதற்கு இந்துத்வா சக்திகளுக்கு அதிகாரம் இல்லை. தமிழகத்திலுள்ள அனைத்து இந்து கோயில்களும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறதே தவிர, இந்து முன்னணியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை இராம கோபாலன்கள் உணர வேண்டும். ஆங்கிலப் புத்தாண்டு என்பது அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நமது வாழ்க்கை நடைமுறை என்பது ஆங்கில புத்தாண்டின் அடிப்படையில் தான் அமைக்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு புத்தாண்டையும் அது ஆங்கில புத்தாண்டாக இருந்தாலும், அதை மனப்பூர்வமாக கொண்டாடி மகிழ்கிற நேரத்தில் அதை சீர்குலைக்கிற வகையில் இந்துத்வா சக்திகள் கருத்து கூறாமல் ஒதுங்கியிருப்பது நல்லது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment