புத்தாண்டு முதல் "டிராக்" மாறும் மும்பை டப்பாவாலாக்கள்.. இனி இவர்களே சமைத்து விநியோகிப்பார்கள் மும்பை: புத்தாண்டு தினமான இன்று முதல் தாங்களே சமையல் செய்து உணவு விநியோகிக்கத் தொடங்கியுள்ளனர் மும்பை டப்பாவாலாக்கள்.
கடந்த 1890ஆம் ஆண்டு முதல் மும்பையில் டப்பாவாலாக்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் இவர்கள் மூலமாக 2 லட்சம் உணவு டப்பாக்கள் விநியோகிக்கப் பட்டு வருகிறது. இவர்கள் உணவு சேகரிப்பதற்கும் விநியோகிப்பதற்கும் சைக்கிள் மற்றும் புறநகர் ரயில்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 5 ஆயிரம் டப்பாவாலாக்கள் தற்போது இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகப் புகழ்.. மும்பை டப்பாவாலாக்களை கண்டு உலகமே இன்னும் வியந்து கொண்டு தான் இருக்கிறது. அங்கு அலுவலகங்களில் பணி புரியும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு நேரம் தவறாமல், குறித்த நேரத்தில் வீடுகளில் தரப்படும் உணவுகளைக் கொண்டு சென்று சேர்க்கும் நேர்த்தி டப்பாவாலாக்களை பிரபலமாக்கியது. அடுத்தகட்டம்... இதுவரை சம்பந்தப்பட்ட ஊழியர்களின் வீடுகளுக்குச் சென்று உணவு சேகரித்து, அதனை அலுவலகங்களுக்குச் சென்று விநியோகம் செய்து வந்தனர். இந்நிலையில், தற்போது தங்களது தொழிலின் அடுத்தகட்டமாக தாங்களே உணவு சமைக்கவும் தொடங்கியுள்ளனர்.
இன்று முதல்... இன்று முதல் மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத் வகை வெஜிடேரியன் மற்றும் நான்வெஜிடேரியன் உணவுகளை டப்பாவாலாக்கள் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். வெஜிடேரியன் உணவு 95 ரூபாய்க்கும் நான் வெஜிடேரியன் 110 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வரவேற்பு... வீட்டில் சமைக்கப்படும் உணவு போல மிகவும் சுவையாக உணவு தயாரிக்கப்படுவதால் டப்பாவாலாக்களின் உணவுக்கு முதல்நாளே நல்ல வரவேற்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. பெண்களுக்கு வேலைவாய்ப்பு... இந்த உணவு தயாரிக்கும் பணியில் தங்களது குடும்பப் பெண்களுக்கும் வாய்ப்பளிக்க டப்பாவாலாக்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த பணியில் ஈடுபடும் பெண்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும் எனத் தெரிகிறது. சமையல்கூடங்கள்... இதற்கென மும்பையின் மத்திய பகுதியில் உள்ள பரேலில் சமையல் கூடங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தற்போது முதல்கட்டமாக25 டப்பாவாலாக்களின் மனைவிகள் இந்த சமையல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பயிற்சி... இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் தரமான சுவையான உணவு தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வாரத்தின் 7 நாட்களுக்கு உணவு கிடைக்கும் என டப்பாவாலாக்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கனவுத் திட்டம்... இது குறித்து மும்பை டப்பாவாலாக்கள் சங்கச் செயலாளர் தாலேகர் கூறுகையில், ''எனது தந்தை கங்காரம் இந்த சங்கத்தின் செயலாளராக இருந்த போது, அவரது கனவுத் திட்டம் இது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதனை நிறைவேற்றியுள்ளோம்'' என்றார்.
No comments:
Post a Comment