டாஸ்மாக் மதுபான கடைக்கு மது குடிக்கச் சென்ற கணவர் வீடு திரும்பாததால், நீதி கேட்டு மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் கிருஷ்ணகிரி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள மோதகணாப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் யசோதா என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், எனது கணவர் குமார் சூளகிரி டூ உத்தனப்பள்ளி சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்கச் செல்வது வழக்கம். கடந்த ஜனவரி 19ந் தேதி இரவு 9 மணிக்கு இரண்டு சக்கர வாகனத்தில் சென்று வழக்கம் போல் மது அருந்தியுள்ளார்.
அப்போது அந்த வழியாக ரோந்து பணிக்கு சென்ற இன்ஸ்பெக்டர் சம்பத், மது அருந்தி கொண்டிருந்த எனது கணவர் குமாரை, விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்துள்ளார். கணவரின் வாகனத்தையும் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். எனது கணவரை இன்ஸ்பெக்டர் சம்பத் விரட்டி அடித்துள்ளார். ஆனால் என் கணவர் குமார் வீடு வந்து சேரவில்லை அவரது டூ வீலர் சூளகிரி போலீஸ் நிலையத்தில் உள்ளது. என் கணவர் எங்கே...? அவரிடம் இருந்த 6 ஆயிரம் ரூபாய் பணம் என்ன ஆனது என்று யசோதா புகார் மனு கொடுத்துள்ளார். புகார் மனுவிற்கு வழக்கு பதிவு செய்துள்ள இன்ஸ்பெக்டர் சம்பத்தும் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்திற்கு கடத்தப்படும் மணல் லாரிகளை மடக்கி வழக்குப் பதிவு செய்வதால் மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்த சிலர் பொய் புகார் கொடுத்து போலீசை மாட்டிவிட பார்ப்பதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். எது உண்மை என்பது குமார் கிடைக்கும் வரை மர்மமாகத்தான் இருக்கும் போல் தெரிகிறது.
No comments:
Post a Comment