தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா போட்டியிடத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாமக நிறுவனர் ராமதாஸின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி தற்போது அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தொடர்பான பணிகளையும் அக்கட்சி முடுக்கி விட்டுள்ளது. நாம் விரும்பும் சென்னை என்ற பெயரில் சென்னை மக்களை நேரடியாக சந்தித்துள்ளார் அன்புமணி. கடந்த 3 நாட்களில் 23 இடங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை அவர் சந்தித்து பேசியுள்ளார்.
சவுமியா அன்புமணி... இந்நிலையில், சட்டசபைத் தேர்தலில் அன்புமணியின் மனைவி சவுமியாவையும் களமிறக்க பாமக முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தர்மபுரியில்... அதிலும், 2014ம் ஆண்டு லோக்சபாத்தேர்தலில் அன்புமணி வெற்றி பெற்ற தர்மபுரி மாவட்டத்திலேயே சவுமியாவை வேட்பாளராக்கும் திட்டம் இருக்கிறதாம்.
பாப்பிரெட்டிப்பட்டி... தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. அதில் ஒன்றான பாப்பிரெட்டிப்பட்டி அமைச்சர் பழனியப்பனின் தொகுதி. எனவே, அது விஐபி தொகுதியாக அந்தஸ்து பெற்றுள்ளது.
முன்னோட்டம்... இதனால், அந்தத் தொகுதியில் சவுமியாவை வேட்பாளராக்க பாமக முடிவு செய்துள்ளதாம். இதற்கு முன்னோட்டமாகத் தான் அந்தத் தொகுதியில் நடக்கும் கட்சி விழா, கோவில் விழா, கட்சி நிர்வாகிகளின் குடும்ப விழாக்களில் சவுமியா பங்கேற்று வருவதாகக் கூறப்படுகிறது.
4வது அரசியல்வாதி... சவுமியா தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் அவரது குடும்பத்தில் அவர் நான்காவது அரசியல்வாதியாக உருவெடுப்பார். இதற்கு முன்பு அவரது தந்தை எம்.கிருஷ்ணசாமி அரசியல், தேர்தல் களம் கண்டவர். சகோதரர் விஷ்ணுபிரசாத்தும் தேர்தல் களம் கண்டவர். கணவர் அன்புமணி எம்.பியாக இருக்கிறார். இவர்களுடன் சவுமியாவும் தேர்தல் களம் கண்ட பெருமையைப் பெறுவார்.
No comments:
Post a Comment