By ஜெயபாஸ்கரன்
அமெரிக்கர்கள் நிலவில் காலடிகளைப் பதித்தவுடன் முதல் வேலையாக தங்களது நாட்டின் கொடியொன்றை அங்கே நட்டு வேற்றுக் கிரகமான நிலவில் தாங்கள் பெற்ற வெற்றியினைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். இந்தியா விடுதலை பெற்றுவிட்டது என்பதற்கான சான்றாக இந்திய தேசியக் கொடியொன்று தில்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது.
ஒன்று வென்றுவிட்டதன் அடையாளமாகவும், இன்னொன்று வீழ்த்தப்பட்டு விட்டதன் அடையாளமாகவும், கொடிகள் பறக்கவிடப்படுகின்றன.
அண்மைக் காலமாக நமது தமிழ் நாட்டின் வயல் வெளிகளில் புதுவகையான கொடி கலாசாரம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டு, அந்தக் கலாசாரத்தில் சின்னங்கள் ஏதுமற்ற வண்ணக் கொடிகளுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டிக்கிறது. எத்தனை நிறங்கள் உண்டோ அத்தனை நிறங்களிலும் பள பளப்பான துணிகளில் பறந்து கொண்டிருக்கும் அந்தக் கொடிகளை, வீட்டு மனைகளாக வளைத்துப் போடப்பட்டுவிட்ட விளைநிலங்களில் மட்டுமே காணமுடியும்.
அத்தகைய கொடிகளால் கைப்பற்றப் பட்டுவிட்ட நிலப்பரப்புகளில் இனி எந்தக் காலத்தில் செடி கொடிகள் பயிராகும் என்பதைச் சிந்தித்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என தமிழரின் ஐந்துவகையான நிலங்களிலும் அந்தக் கொடிகள் ஆயிரக்கணக்கில் ஆங்காங்கே பறந்து கொண்டிருக்கின்றன. வேளாண்மையின் பொருட்டு நமது முன்னோர்களால் சமப்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்ட நிலப்பரப்புகள்தான் இன்றைய வீட்டுமனை வணிகத்திற்கு வசதியான விற்பனைக் களங்களாக மாறியிருக்கின்றன. மற்ற நிலப்பரப்புகளைக் காட்டிலும் கைப்பற்றிக் கொடிகளை நடுவதற்கு ஏதுவானவைகளாக இருப்பவை மருத நிலப் பரப்புகள்தான். ஏனெனில், மருத நிலத்திற்கு உரியவர்கள், எத்தகையச் சுய வலிமையையும் பெற்றிருக்காத, அப்பாவித்தனம் நிறைந்த, கடுமையான உழைப்பைத் தவிர வேறு எதையும் அறியாத வேளாண்குடி மக்களாவர். சில லட்சங்களை கையோடு எடுத்துச் சென்றால் பரப்பளவிற்கு ஏற்ப, அவர்களது நிலங்களில் யார் வேண்டுமானாலும் கொடி நடலாம்.
வேளாண் குடிகளுக்கு எதிரான வேறு கொடிகளை அண்டை மாநிலங்களின் அரசுகள் அனுமதிப்பதில்லை என்பதால் தமிழ் நாட்டின் மருத நிலம் இப்போது வேக வேகமாக மனைகளின் நிலமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு விவசாயியின் விற்பனை செய்யப்பட்ட நிலத்தில், வேளாண்மைத் தொழில் மட்டுமே நடைபெற வேண்டும் என்கிற கர்நாடக அரசின் சமூக நோக்கிலான உறுதியான சட்டம் போன்று தமிழ்நாட்டில் எத்தகையச் சட்டமும் இல்லை. இந்தியா முழுவதும் விவசாயத்திற்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஆதரவான குரல்கள் இப்போது பெருகி வருகின்றன. இன்னும் ஒரு படி மேலே சென்று இயற்கை வேளாண்மையின் பக்கமும், இயற்கையான மரபுவழி உணவுத் தானியங்களின் பக்கமும் இன்றைய மக்களின் கவனம் திரும்பியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் இத்தகைய விழிப்புணர்வு தலைதூக்கியிருக்கிறது என்றாலும் கூட, விவசாய நிலப்பரப்புகள் வேறு நோக்கங்களுக்காக வேக வேகமாகப் பெருமளவில் கைமாறிக் கொண்டிருப்பதை எவ்வகையிலும், எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. "நாடு முழுதும் இயற்கை விவசாயம் நடைபெறவேண்டும்; வேளாண் தொழிலை கால்நடைப் பராமரிப்புடன் சேர்த்து மேம்படுத்த வேண்டும், அனைத்துக் குளிர்பானங்களிலும் பழச்சாறுகளைச் சேர்க்கும் உத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும், கால்நடைகள் வளர்ப்பு, பயிர் வளர்ப்பு, வருமானத்திற்கு உகந்த மரங்கள் வளர்ப்பு எனும் மூன்று பிரிவுகளாக விவசாயத் தொழில் மேற்கொள்ளப்பட வேண்டும்' என்றெல்லாம் விவசாயம் குறித்த தனது லட்சியக் கருத்துகளை சிக்கிம் மாநிலத்தில் அண்மையில் நடந்த விவசாயக் கருத்தரங்கு ஒன்றில் முன்வைத்திருக்கும் பிரதமர் மோடி, இத்தகையக் கருத்துகளை நடைமுறைப்படுத்தவும் குளிர்பானத் தயாரிப்பு நிறுவனங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடியும் வருகிறார்.
÷
மத்திய, மாநில அரசுகளின் வேளாண்மைத் தொழிற்திட்டங்கள் ஒரு பக்கம் விரிவடைந்து கொண்டேயிருக்கின்றன. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ரூ. 150 கோடியில் வேளாண் கல்லூரிகளை அமைக்க இருப்பதாகவும் வேளாண் இயந்திரங்கள், விதைகள் விநியோகத்தில் புதுப்புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாகவும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இன்னொரு பக்கம் விவசாயத் தொழிலை எல்லோர்க்கும் பயிற்றுவித்து அனைவரையும் அதில் ஈடுபடுத்தும் வகையில் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கெல்லாம் விவசாய ஆராய்ச்சி அமைப்புகள் பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், நூற்றுக்கணக்கான தகவல் தொழில் நுட்பத்துறை இளைஞர்கள் கிராமப் புறங்களின் வேளாண் களங்களில் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றுக்கெல்லாம் மேலாக, நெல்பயிரிடும் நாடுகளின் கைகளில் தான் உலகின் எதிர்காலம் இருக்கிறது. எதிர்காலத்தில் வளமான நாடு எது என்றால் அது அதிக அளவில் நெல்பயிரிடும் நாடுதான் என்று தெரிவித்திருக்கிறார் பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி நாதன்.
நெல் சாகுபடி செய்ய முற்றிலும் உகந்த நிலம் மருத நிலமேயாகும். தமிழ்நாட்டில் குறிஞ்சி நிலத்தில் (மலைப்பகுதிகளில்) உற்பத்தியாகின்ற ஆறுகள் அனைத்தும் மருத நிலப்பரப்புகளின் நெல் சாகுபடிக்குத்தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆறுகளும், அணைகளும், ஏரிகளும், கண்மாய்களும், குட்டைகளும், பல்வேறு வகையான வாய்க்கால்களும் மருத நிலப்பரப்புகளின் நெல் சாகுபடியை மனதிற்கொண்டே வடிவமைக்கப்பட்டு இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மருத நிலம் எனும் சமப்படுத்தப்பட்ட நிலப்பகுதிகள் வேளாண்மைத் தவிர்த்த வேறு வேறு தேவைகளுக்காக எத்தகையக் கட்டுப்பாடுகளும் இன்றி கைமாறிக்கொண்டேயிருக்கும் எனில், மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வகை நீராதார நிலைகளும் நிர்மூலமாகிப் போய், காலப்போக்கில் அனைவராலும் கைவிடப்பட்டு, அத்தகைய இடங்களிலும் மனை வணிகக் கொடிகள் பறக்கத் தொடங்கிவிடும். இந்த ஆபத்தை உணர்ந்து நமது மருத நிலப்பரப்புகளை பாதுகாக்கவேண்டிய கடமையை அரசுகள் மட்டுமல்ல, நமது மக்களும் உணர்ந்து செயல்பட்டாக வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அண்மையில் ஒரு நாள், பச்சைப் பசேலென்றிருந்த வயல்வெளிகளைப் பார்த்தபடி, ஒரு பேருந்துப் பயணச் சுகத்தில் நாம் திளைத்திருந்தபோது அவ்வயல்களுக்கு நடுவே ஒரு பெரிய வெற்றிடத்தைப் பார்க்க நேர்ந்து. அந்த இடம் வெண்ணிற கற்களால் பங்கு பிரிக்கப்பட்டு காட்சியளித்தது. வரிசை வரிசையாக நடப்பட்ட வண்ண வண்ணக் கொடிகளும் அங்கே பறந்து கொண்டிருந்தன. நாம் பயணித்த பேருந்து ஒரு சில வினாடிகளில் அவ்விடத்தைக் கடந்து விட்டது.
ஆனால், அந்தக் காட்சியைக் கடந்து வர நம்மால் முடியவில்லை. விளை நிலம் ஒன்று வேக வேகமாக வீட்டுமனை நிலமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஒரு விவசாயிடமிருந்து கைமாறிய அந்த நிலத்தில் மனை வணிகரின் கொடிகள் நூற்றுக்கணக்கில் பறந்து கொண்டிருக்கின்றன. அவ்வளவு சிறிய நிலப்பரப்பில் அத்தனைக் கொடிகளை ஏன் பறக்கவிட்டிருக்கிறார்கள்?
அந்நிலத்தில் இனிமேல் பசுமை நிற நெல்வயல்களுக்கு இடமில்லை என்பதை அறிவிக்கும் விதமாக பல்வேறு வண்ணங்களால் ஆன கொடிகளை நட்டு வைக்கிறார்களா? ஒரு விவசாயியின் வீழ்ச்சியை அவனது நிலத்திலேயே கொடிகளை நட்டுக் கொண்டாடுகிறார்களா? வேளாண் குடிகளின் மீது வெற்றிக் கொடிகளைப் பறக்கவிடுவதுதான் நமது நாட்டின் வளர்ச்சியா? காரணம் இல்லாமலா அத்தனைக் கொடிகளை அந்நிலத்தில் நட்டிருப்பார்கள்?
நாம் இப்படி யோசித்துப் பார்த்தோம். அந்த நிலத்தில் பறக்கவிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு கொடிக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அந்த நிலத்தை முன் வைத்து ஒரு விவசாயி தோற்கடிக்கப்பட்டிருக்கிறான். அந்நிலத்தில் அவனது விவசாயத் தொழில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. அந்நிலத்தை நம்பி வாழ்ந்த ஒரு குடும்பமும் அதன் கெüரவமும் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன.
அந்நிலத்தை உழுத மாடுகள், அதில் நடந்து இரை தேடிய கொக்குகள், தத்தித் தாவிய தவளைகள், ஊர்ந்து நீந்திய பாம்புகள், வரப்புவளைகளில் வாழ்ந்த எலிகள், நெல்மணிகளைத் தின்று பறந்த பறவைகள் என்று அந்த நிலம் சார்ந்து வாழ்ந்து கொண்டிருந்த அனைத்து உயிர்களும் தோற்கடிக்கப்பட்டுள்ளன. பெருக்கெடுத்துச் சென்று அந்நிலத்தில் பல காலம் பாய்ந்து கொண்டிருந்த நீருக்கும் அந்த நிலத்துக்குமான உன்னதமானதொரு இயற்கையுறவு தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. ஓர் இனிய சூழல் நலம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கணக்கிட்டுச் சொல்ல முடியாதபடிக்கு ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்கு விளைந்து கொடுக்கத் தயாராக இருந்த, முந்தைய ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்கு எதை எதையோ விளைவித்துக் கொடுத்துக் கொண்டும் இருந்த ஒரு நிலத்தின் இயற்கையான கொடை இயல்பு, கொடூரமான முறையில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.
அந்த நிலப்பரப்பு அடைந்த தோல்விகள் ஒவ்வொன்றின் மீதும் வெற்றிக் கொடிகளாக பல்வேறு வண்ணக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. ஓர் ஏக்கர் நிலத்தில் வேறு வேறு வண்ணங்களில் நூறு கொடிகள் பறந்து கொண்டிருப்பதற்கான காரணத்தை நாம் இப்படித்தான் புரிந்து கொள்கிறோம். நம்முடைய அத்தகையப் புரிதல் கற்பனை அல்ல உண்மை, பேருண்மை.
நீரின்றி மட்டுமல்ல, நீர்பாய்ந்து விளைகின்ற நிலமின்றியும் அமையாது உலகு.
ஒரு விவசாயியின் விற்பனை செய்யப்பட்ட நிலத்தில், வேளாண்மைத் தொழில் மட்டுமே நடைபெற வேண்டும் என்கிற கர்நாடக அரசின் சமூக நோக்கிலான உறுதியான சட்டம் போன்று தமிழ்நாட்டில் எத்தகையச் சட்டமும் இல்லை.
No comments:
Post a Comment