Latest News

ஜல்லிக்கட்டுக்கு தடை...மதுரையில் காலவரையற்ற உண்ணாவிரதம்: மொட்டை அடித்தும் போராட்டம் !


ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி மதுரை அலங்காநல்லூரில் பொதுமக்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மொட்டை அடித்தும் போரட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து தென் மாவட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், மாடு பிடி வீரர்களும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களும் இரவு பகலாக அதற்கான ஏற்பாடுகளை உற்சாகமாக மேற்கொண்டு வந்தனர். இதனிடையே ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையடுத்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இரண்டு இளைஞர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். உடனடியாக, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தடையை நீக்க கோரி, கடைகள் அடைப்பு, சாலைமறியல், கருப்புக்கொடி போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சாலைமறியல் போராட்டத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் முன்பு கூடிய நூற்றுக்கணக்கானோர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் தங்களை ஏமாற்றி விட்டதாகவும், இதற்கு அரசியல்வாதிகளே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதேபோல் மதுரையில் பாலமேட்டில் பொதுமக்கள் வீடுகளில் கருப்பு துணிகளை கட்டியும், மொட்டையடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில் மதுரை மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.