சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவர் ஆட்சிபுரிந்த தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள கோட்டை பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது. அவரது வழித்தோன்றல்கள் பொருளாதார ரீதியாக தவிப்பது மற்றொரு சோகம்.
1760-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். நாட்டின் சுதந்திரத்துக்காக, ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போர்புரிந்த அவர், கயத்தாறில் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக்குறிச்சியின் வரலாறு முடிந்துவிடவில்லை. பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத் திலிருந்து ஆங்கிலேயர் கள் நீக்கினர். அப்போதிருந்த கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டது. ஆனாலும் கட்டபொம்மனின் வீரமும், உயிர்த் தியாகமும் ஒவ்வொருவரையும் இன்றளவும் வீறுகொண்டு எழச்செய்து கொண்டிருக்கிறது.
பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்து கோட்டையின் வடிவையொத்த ஒரு கோட்டையை, 1974-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி எழுப்பினார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பை சுற்றி மதிற்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது.
கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாக மண்டபத்தின் உள்ளே தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977-ம் ஆண்டு முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.
தற்போது 35 ஏக்கர் பரப்புக்கு மேலுள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதி கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறை யின் பராமரிப்பில் உள்ளன. கட்டபொம் மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்தில் இப்பகுதி மக்கள் பயன் படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள், நாணயங்கள் போன்றவை தொல் பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டன. அவை தற்போது சென்னையில் அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
பராமரிப்பில்லை
வீரம் விளைந்த இந்த பூமிக்கு இப்போதும் மக்கள் திரளாக வந்து கோட்டையை பார்வையிட்டுச் செல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. காரணம், கோட்டை பராமரிப்பின்றி இருக்கிறது. பராமரிப்பு ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை. கோட்டைச்சுவரில் வண்ணம் பூசி ஆண்டுகளாகிவிட்டன. கோட்டையினுள் செடி, கொடிகள் புதர்களாகிவிட்டன.
சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் ஓட்டப்பிடாரத் திலிருந்து கோட்டை வரையில் குடிநீர் குழாய் பதித்து குடிநீர் கொண்டுவரும் திட்டம் செயல் படுத்தப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த குழாயில் தண்ணீர் வரவில்லை. அங்குள்ள ஆழ்குழாய் கிணறு கோடையில் உதவாது. சுற்றுலா அமர்ந்து இளைப்பாற வசதிகள் இல்லை.
சுற்றுலா அமைச்சர்
இவ்வாறு பல்வேறு குறைபாடுகளுடன் கோட்டையை சுற்றுலாத்துறை பராமரிப்பின்றி வைத்திருப்பது குறித்து இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார் கள். இத்தனைக்கும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்தான். இம்மாவட்டத் துக்கு சுற்றுலா அலுவலர்கூட நியமிக்கப்படாத நிலையில், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பராமரிப்பு எப்படி இருக்கும்? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
கட்டபொம்மன் கோட்டையை யொட்டி இருக்கும் வீரசக்கதேவி ஆலய கமிட்டி இணை செயலாளர் சி.சண்முகமல்லுச்சாமி கூறியதாவது:
கோட்டை நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் இருக்கிறது. உள்ளே இருக்கும் செடி கொடிக ளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு ஆட்கள் இல்லை, தண்ணீருக்கும் பற்றாக்குறை. கட்டபொம்மன் பிறந்த நாளில் அதிகாரிகளும், கோட்டை பொறுப்பாளர்களும் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து செல்வதுடன் சரி. பின்னர் எட்டிக்கூட பார்ப்ப தில்லை. கோட்டைக்கும் மக்கள் சந்தோஷமாக வந்து செல்வதற் கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. அருகிலுள்ள குடியிருப்புகளில் இருக்கும் அவரது வழித்தோன்றல்கள் வறுமையில் வாடிக்கொண் டிருக்கிறார்கள். சுற்றுலாத் துறையும், தொல்லியல்துறையும் கோட்டையை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றார் அவர்.
ஏழ்மையில் வாரிசுகள்
கோட்டையின் நிலை இப்படியிருக்க அதையொட்டி கட்டபொம்மன் வாரிசுகள் மற்றும் வழித்தோன்றல்களுக்கு கட்டித்தரப்பட்ட 202 வீடுகளில் பல இடிந்து சேதமடைந்திருக்கின்றன. இதனால் இப்போது 180 வீடுகளில் மட்டுமே மக்கள் குடியிருக்கிறார்கள். இங்குள்ளவர்களுக்கு பொருளாதார மேம்பாட்டுக்கான எவ்வித சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. இதனால் தூத்துக்குடியில் உப்பள வேலைக்கும், கட்டிடப் பணிகளுக்கும் செல்கிறார்கள்.
No comments:
Post a Comment