குடியரசு தின விழாவையொட்டி சென்னையில் இன்று நடந்த விழாவில் அண்ணா பதக்கம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார் முகம்மது யூனுஸ். அவரது பெயரை சென்னை மக்கள் காலாகாலத்துக்கும் மறக்க முடியாது. காரணம் அவர் செய்த செயல் அப்படி. கடந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் - டிசம்பரில் சென்னையை பெரும் வெள்ளம் புரட்டிப் போட்டது. சென்னையே மூழ்கிப் போனது. அப்போது அரசின் உதவி கிடைக்காத அவல நிலைக்குப் பெரும்பாலான மக்கள் தள்ளப்பட்டனர். இதனால் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொண்டனர்.
இந்த நிலையில், டிசம்பர் 1ம் தேதி ஊரப்பாக்கம் பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தார் முகம்மது யூனுஸ். அங்கு ஒரு வீட்டில் சிக்கியிருந்த கர்ப்பிணிப் பெண் சித்ராவை மீட்டு பெங்களத்தூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அடுத்த நாள் அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பெண்ணாக பிறந்தாலும் கடவுளாக வந்து சித்ராவைமீட்ட யூனுஸுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சித்ராவும், அவரது கணவரும் யூனுஸ் என்றே பெயரிட்டனர். மனிதநேயத்தின் விஸ்வரூபத்தை உலகம் பார்த்த நாள் அது. அந்த யூனுஸுக்குத்தான் தமிழக அரசு இன்று அண்ணா பதக்கம் வழங்கிக் கெளரவித்துள்ளது. சித்ராவை மட்டுமல்ல, வெள்ளத்தில் சிக்கி் தவித்த பலரையும் தனி மனிதராக யூனுஸ் காப்பாற்றி மீட்டுக் கரை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment