நாட்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்து, விலைவாசி, குற்றங்கள் போன்றவை அதிகரித்துச்செல்வதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது குற்றம்சாட்டினார். புத்தாண்டும் அதுவுமாக, மத்திய அரசு மீது புகார் பட்டியலோடு செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம் மேலும் கூறியதாவது: பாகிஸ்தானுடன் நட்புறவை கொண்டிருக்க வேண்டும் என்றுதான், காங்கிரசும் விரும்புகிறது. ஆனால், திடீர் யூ-டர்ன்கள் (மோடியின் திடீர் பாக்., பயணம்), ஒரு நல்ல வெளியுறவு கொள்கையை வடிவமைக்க முடியாது.
மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மீது மக்கள் அதிருப்தியிலுள்ளனர். 2015ம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.1 முதல் 8.5% அளவுக்கு இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2015-16ம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 முதல் 7.3 சதவீதத்தை தாண்டாது என்று நான் அஞ்சுகிறேன். ஏனெனில், வேலை வாய்ப்பு, கூடுதல் முதலீடு, விரைவான கட்டமைப்பு வசதிகள் போன்ற வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. அதேநேரம், உணவு பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது, குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன, மின்சாரம், குடிநீர் விலைவாசி ஏறியுள்ளது. நாடாளுமன்றம் நடைபெற காங்கிரஸ் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறுவது தவறு. மக்களவையில் 67, மாநிலங்களவையில் 45 சட்டங்கள் நிறைவேற காங்கிரஸ் ஒத்துழைப்பு கொடுத்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு சட்டத்தை பொறுத்தளவில், 3 முக்கிய திருத்தங்கள், மற்றும் சில சிறிய திருத்தங்கள் தேவை என்பதுதான் காங்கிரஸ் நிலைப்பாடு. காரணத்தோடுதான், ஜிஎஸ்டி வரிவிதிப்பு மசோதாவை காங்கிரஸ் எதிர்த்துள்ளது. அதேநேரம், எதிர்க்கட்சிகளை திருப்திப்படுத்தி, சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இவ்வாறு சிதம்பரம் குற்றச்சாட்டு சுமத்தினார்.
No comments:
Post a Comment