Latest News

இந்தியாவில் உள்ள 940 நீதிபதிகளில் 20 பேர்தான் தாழ்த்தப்பட்டவர்கள்


இந்தியாவில் உள்ள 940 நீதிபதிகளில் 20 பேர்தான் தாழ்த்தப்பட்டவர்கள், அனைத்துப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் சேர்த்துக் கூட்டிப்பார்த்தால் 100 பேர் தான் இருப்பார்கள். மீதி அனைவரும் பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதியினர்தான். இதுதான் இந்திய சமூகத்தில் நீதித்துறையின் இலட்சணம்.//

(19.12.2015 அன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரை மாவட்டக் கிளை 12-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது.மதுரை மடிசியா அரங்கத்தில் மாவட்ட செயலாளர் லயனல் அந்தோனிராஜ் தலைமையில் நடைபெற்றது. கிளைப் பொருளாளர் சங்கையா அனைவரையும் வரவேற்றார்.மதுரைக் கிளைத் துணைத் தலைவர் வழக்கறிஞர் நடராஜன் நன்றி சொல்லி கூட்டம் முடிந்தது. கூட்டத்தில் மாணவர்கள், தொழிலாளர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், இசுலாமியர்கள் என பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.)
------
“காவிமயமாகும் நீதித்துறை! பாசிசமயமாகும் அரசு! தீர்வின் திசை என்ன?” என்பது பற்றி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் உரை

****

இந்தக் கூட்டம் கம்யூனிஸ்ட்களுக்கோ, புரட்சியாளர்களுக்கோ இல்லை. இந்த நாட்டில் கருத்து சுதந்திரம் பேச்சுரிமை, சங்கம் சேரும் உரிமை எல்லாம் இருக்கிறது, இது ஒரு ஜனநாயக சோசலிசக் குடியரசு நாடு என்று நம்புகிறவர்களுக்குத்தான் இந்தக்கூட்டம்.

இந்திய அரசியல் சட்டத்தின் சரத்து 51 அறிவியல் பூர்வமான விஷயங்களை சமூகத்திலே முன்னெடுத்துச் செல்வது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்று வலியுறுத்துகிறது. சுப்பிரமணியசாமி என்ற அரசியல் தரகன் உச்சநீதிமன்றத்திலே ஒரு வழக்கு தாக்கல் செய்கிறார். 17 இலட்சம் வருடத்திற்கு முன்பாக இங்கே இராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு ஒரு பாலம் கட்டப்பட்டது. இது இராமன் பாலம். இந்தப் பாலம் தொடர்பான செய்தி வால்மீகி இராமாயணத்திலும், துளசிதாசர் இராமாயணத்திலும் இருக்கிறது. அந்த இராமன் பாலத்தை இடித்து சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டு வரப்போகிறார்கள். அதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திலே வழக்குத் தாக்கல் செய்கிறார். உடனடியாக உச்சநீதிமன்றம் அதற்குத் தடை விதிக்கிறது.

ஒரே அரசியல் சட்டம்தான். இந்துக்களுக்கு தனி, முஸ்லீம்களுக்குத் தனி, கிறிஸ்துவர்களுக்குத் தனி, சீக்கியர்களுக்குத் தனி என்று கிடையாது. ஆனால் வெவ்வேறு வகையான தீர்ப்புகள் இருக்கிறது. சல்மான் கான் வழக்கில் நீதிமன்றத்திலே சாட்சியத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படுகிறது. உயர்நீதிமன்றம் அதே சாட்சியத்தின் அடிப்படையில் விடுதலை செய்கிறது. ஜெயலலிதாவை நீதிபதி குன்ஹா அவர் முன் வந்த சாட்சியத்தின் அடிப்படையில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கிறார். நீதிபதி குமாரசுவாமி அதே சாட்சியத்தின் அடிப்படையில் அவரை விடுவிக்கிறார். ஒரே சட்டம்தான்.

ஏராளமான இஸ்லாமியர்கள். கிறிஸ்துவர்கள் இந்து மத வெறியர்களால் கொல்லப்படுகிறார்கள். ஆனால் பார்ப்பன, வைதீக, இந்து மதவெறி ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைச் சார்ந்த எந்த ஒரு நபரும் இன்றுவரை தூக்கு மேடை ஏறியதில்லை, இதன் எதிரொலியாகக் குண்டு வைத்த இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கூட தூக்குமேடை ஏறியிருக்கிறார்கள். அஜ்மல் கசாப்பிலிருந்து, யாகூப் மேமன் வரை. ஒரே சட்டம்தான். குண்டு யார் வைத்தாலும் வெடிக்கும். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களும் வைக்கிறார்கள், இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வைக்கிறார்கள். ஆனால் நீதிமன்றத்தை நாடினால் நீதிமன்றத் தீர்ப்பு மூலம் இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளாகவும், இந்துக்கள் பிரதமராகவும், உயர்பதவிகளிலும் அலங்கரிக்கிறார்கள். ஒரே அரசியல் சட்டத்திலே இரண்டு விதமான தீர்வுகள் சொல்லப்படுகின்றன.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு. 1969-ல் தந்தை பெரியார் கருவறைத் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை அறிவிக்கிறார். அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வருகிறது. இந்துக் கோயில்களில் அது வரை இருந்த பரம்பரை வழி அர்ச்சகர் நியமனம் ஒழிக்கப்படுகிறது. இதற்கு எதிராகப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார்கள்.அந்த வழக்கில் ஆகம முறைப்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது நீதிமன்றம். இருப்பினும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அரசு கொண்டுவந்திருந்த சட்டத்திருத்தத்தையும் தடைசெய்யவில்லை இதைத்தான் பெரியார், ”ஆபரேசன் வெற்றி ஆனால் நோயாளி மரணம்” என்று குறிப்பிட்டார்.

இப்போதைய தீர்ப்பின் மூலமும் கருவறைத் தீண்டாமை சட்டப்படி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகமம் என்பது என்ன? கோவில்கள் எப்படி அமைந்திருக்க வேண்டும், கருவறை எப்படி அமைந்திருக்க வேண்டும், கடவுளுக்கு எவ்வாறு பூஜை செய்ய வேண்டும் என்பன பற்றித்தான் ஆகமத்தில் கூறப்பட்டிருக்கிறதே ஒழிய குறிப்பிட்ட சாதியினர்தான் அர்ச்சகராக வேண்டும் என்று எந்த ஆகமத்திலும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் காலங்காலமாக இந்தக் கோயில்களில் அர்ச்சகராக இருக்கிறோம் என்ற காரணத்தை மட்டுமே சொல்லி அவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். இது மட்டுமா காலம்காலமாக இருந்தது? தேவதாசி முறை, உடன்கட்டை ஏறுதல், விதவை மறுமணத்திற்குத் தடை ஒழிக்கப்பட்டது. இப்பொழுது கூட கர்நாடகாவில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் படுத்து உருண்டால் புண்ணியம் கிடைக்கும் என்ற வழக்கத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திலே நாடார் ஜாதிப் பெண்கள் மார்பகத்தை மறைத்து சேலை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டது., ”அவர்கள் மார்பில் சேலைஅணிவது எங்கள் மத உணர்வைப் புண்படுத்துகிறது” என்று பார்ப்பனர்கள் அவர்களின் மார்பகத்தை அறுத்து எறிந்தனர்.

இவற்றையெல்லாம் பழக்க வழக்கங்கள் என்று இன்று ஏற்றுக் கொள்ள முடியுமா? அயோத்தி இராமன் வழக்கையே எடுத்துக் கொள்வோம். இராமன் அங்குதான் பிறந்தான் என்பது எங்கள் நம்பிக்கை என்கிறார்கள் பார்ப்பனர்கள். 17 இலட்சம் வருடத்திற்கு முன் இராமன் பிறந்தான், புஷ்பக விமானம் இருந்தது, இராமேசுவரத்திற்கும் இலங்கைக்கும் இடையில் அணிலையும், குரங்கையும் வைத்து பாலம் கட்டினான் என்று புளுகுகிறார்கள் பார்ப்பனர்கள்.

அனைத்தையும் நம்பிக்கை என்று அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியுமா? அனைத்து மதத்தினருக்கும் நம்பிக்கை என்பது தனிப்பட்ட முறையில் உண்டு. ஆனால் அவற்றைப் பொதுவான கருத்தாக அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் வரலாற்று ரீதியிலான மற்றும் அறிவியல் ரீதியிலான சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும். நம் நாட்டின் அரசியல் சட்டம் எப்படி இருக்கிறது? நீதிபதிகள் எப்படிப்பட்டவர்கள்? இரண்டுமே காவிமயமாக்கத்தான் இருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தில் மதச்சார்பற்ற என்ற வார்த்தை எங்கும் கிடையாது. 1976-ம் ஆண்டு 42-வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதில்தான் மதச்சார்பற்ற என்ற வார்த்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டது. 1948-ல் இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கவேண்டும் என்று ஒரு மசோதா கொண்டுவரப்பட்டு அது தோற்கடிக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், சரத்து 25,26,27 ஆகியவைதான் இப்போது பிரச்சினையாக உள்ளன. அவை மத நிறுவனங்களின் உரிமையைக் கூறுகின்றன. அதே அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 16 அனைவரும் சமம் என்று கூறுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் பசுவதை தடை செய்யப்பட்டால் இந்தியாவில் எங்கும் நம்மால் மாட்டுக்கறியை உண்ண முடியாது.

உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் கூறுகிறார் ”எனக்கு மட்டும் சர்வ அதிகாரமும் இருந்தால் பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிப்பேன்” என்று. இந்திய அரசியல் சட்டத்தின் மீது ஆணையெடுத்துக் கொண்டு பதவியேற்ற ஒரு நீதிபதி இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராகப் பேசக் கூடாது. எனினும் அவரது பேச்சு நமக்கு உணர்த்துவது எது? நீதித்துறை காவிமயமானதைத்தான், குஜராத்தில் ஒரு நீதிபதி ஒரு வழக்கிலே கூறியிருக்கிறார், ”நமது நாட்டை 2 விசயங்கள் தான் கெடுக்கிறது, ஒன்று ஊழல். மற்றொன்று இட ஒதுக்கீடு” என்று. இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச்சட்டப்படி ஒரு மனிதனின் அடிப்படை உரிமை. அதை மறுத்து ஒரு நீதிபதி பேசலாமா? ஒரு வழக்கில் ஒரு நீதிபதி அடுத்த ஆண்டு முதல் டிசம்பர் 6 அன்று போராட்டம் நடத்துவதற்கு எந்த அமைப்பினருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று தீர்ப்புக் கூறுகிறார். அந்த நீதிபதி ஒரு பார்ப்பனர். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த உடனே கொண்டு வரப்பட்ட முதல் சட்டம் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம். அனைத்துத் துறைகளிலும் நாம் காலூன்றிவிட்டோம். மீதமுள்ள ஒரே துறை நீதித்துறை. அதிலும் நமது ஆட்களைக் கொண்டுவந்துவிட்டால் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்துக்களின் இராஜ்ஜியமே இந்தியா முழுவதும் இருக்கும் என்று முடிவுகட்டுகின்றது பி.ஜே.பி. அரசு. இந்தியாவில் உள்ள 940 நீதிபதிகளில் 20 பேர்தான் தாழ்த்தப்பட்டவர்கள், அனைத்துப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் சேர்த்துக் கூட்டிப்பார்த்தால் 100 பேர் தான் இருப்பார்கள். மீதி அனைவரும் பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதியினர்தான். இதுதான் இந்திய சமூகத்தில் நீதித்துறையின் இலட்சணம்.
நன்றி : 
தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் – மதுரை

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.