Latest News

சென்னையில் புகைமூட்டத்தால் விமான போக்குவரத்து பாதிப்பு 3 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது


சென்னையில் போகி பண்டிகையால் ஏற்பட்ட கடும் புகை மூட்டம் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 3 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது.

புகை மூட்டம்
போகி பண்டிகையை முன்னிட்டு நேற்று அதிகாலையிலேயே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு பழைய பொருட்களை போட்டு தீ வைத்து எரித்தனர். இதனால் நகர் முழுவதும் ஒரே புகை மூட்டமாக காணப்பட்டது. அதோடு பனி மூட்டமும் இருந்தது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஓடுபாதை பகுதியில் புகை மூட்டமாக இருந்தது. இதனால் மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மஸ்கட், சிங்கப்பூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து வந்த 3 விமானங்கள் தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. காலை 11 மணிக்கு பின்னர் 3 விமானங்களும் சென்னைக்கு திரும்பி வந்தன.

வானில் வட்டமிட்டன
இதேபோல் துபாய், கத்தார், சிங்கப்பூர், மதுரை, டெல்லி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த 7 விமானங்கள் கடும் புகை மூட்டம் காரணமாக சென்னையில் தரை இறங்க முடியாமல் சுமார் 1 மணி நேரம் வானில் வட்டமிட்டன.

காலை 9 மணிக்கு பின்னர் புகை மூட்டம் குறைந்ததால் விமானங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக தரை இறங்கின. இதனால் சென்னையில் இருந்து டெல்லி, கொல்கத்தா உள்பட பல இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.

விமானங்கள் தாமதம்
அதிகாலை 5 மணிக்கு அந்தமான் செல்ல வேண்டிய விமானம் புகை மூட்டம் காரணமாக 5 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு புறப்பட்டு சென்றது. புகை மூட்டத்தால் சுமார் 15–க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்து சென்றன.

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வந்தார். புகை மூட்டதால் சென்னையில் தரை இறங்க முடியாமல் அந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டதால் காலை 11 மணிக்கு அவர் சென்னைக்கு திரும்பி வந்தார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.