தாவூத் இப்ராஹிமை இந்தியா கொண்டுவருவது எப்படி என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டின் உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கினர். அனைத்து மாநில, போலீஸ் டிஜிபிக்கள், ஐஜிபிக்களுடனான 3 நாள் ஆலோசனை கூட்டம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் குஜராத் மாநிலம், கட்ச் நகரில் வைத்து நடைபெறுகிறது. வழக்கமாக டெல்லியில் இதுபோன்ற கூட்டங்களை முந்தைய அரசுகள் நடத்தி வந்த நிலையில், மோடி அதை மாற்றியுள்ளார். கடந்த ஆண்டு அசாம் தலைநகர் குவஹாத்தியில் இவ்வாலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், இரு முக்கிய விஷயங்கள் பேசப்பட்டன. ஒன்று ஐஎஸ்ஐஎஸ் தொடர்பானது, மற்றொன்று, தாவூத் இப்ராஹிமை இந்தியா கொண்டுவருவது பற்றியது. அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் உச்சி மாநாட்டில், அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப்போடு, மோடி சந்திப்பு நடத்த உள்ளார். அப்போது, தாவூத் பாகிஸ்தானில் இருப்பது குறித்த கூடுதல் விவரங்களை ஷெரிப்பிடம் கொடுத்து, தாவூத்தை ஒப்படைக்க பிரதமர் மட்டத்தில் அழுத்தம் தர வேண்டும் என்று உயர் அதிகாரிகள் வலியுறுத்தினர். ஐஎஸ்ஐஎஸ் இந்தியாவுக்கு பெரும் சவாலான விஷயம் என்பதை நினைவுபடுத்திய அதிகாரிகள், இந்தியா இந்த விவகாரத்தை சிறப்பாக கையாளுவதையும் நினைவுகூர்ந்தனர். இந்தியாவில் இருந்து 23 ஆதரவாளர்கள்தான் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதையும் அவர்கள் உறுதி செய்தனர். அதேநேரம், மிரட்டல் தொடருவதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், எல்லை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும், இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment