Latest News

தேசிய பேரிடர் பகுதியாக சென்னை மாற என்ன காரணம் தெரியுமா? வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்


சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கி, பேரழிவு ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் ஒரே நாளில் வீதிக்கு வருவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தாமதமான, முன்யோசனையற்ற முடிவுதான் காரணம் என்கிற அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. எந்த வித முன்னறிவிப்பும் இன்றி அடையாறு ஆற்றில் 80000 கனஅடி நீர் பாய காரணம் அதிகாரிகளின் மெத்தனப்போக்குதான் என்றும் திடுக்கிடும் உண்மை தெரியவந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகள் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழைக்கு முழு கொள்ளளவை எட்டிவிட்டன. இதனையடுத்து ஏரிகளின் பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நவம்பர் 17-ந் தேதி முதல் தொடர்ந்து நீர் திறந்துவிடப்படுகிறது. நவம்பர் 17-ந் தேதியன்று மட்டும் 18,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் நீர் திறக்கப்பட்டு கொண்டே வந்தது. இதனால் ஆற்றின் கரையோரமாக இருந்தவர்கள் மட்டுமின்றி, தாம்பரம், முடிச்சூர் உள்பட தென்சென்னையில் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கின.

இந்தநிலையில்தான், கடந்த 29ம் தேதி நள்ளிரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தது. டிசம்பர் 2ம் தேதி அதிகாலை வரை 40 மணிநேரம் பெய்த தொடர் மழையால், செம்பரம்பாக்கத்தில் இருந்து பல்லாயிரம் ஆயிரம் கன அடி தண்ணீர் திடீரென அடையாறு ஆற்றில் வெளியேற்றப்பட்டது. டிசம்பர் 1-ந் தேதியன்று சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி 20,000 கன அடிநீர் செம்பரம்பாக்கத்தில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ளது. அதற்கு மறுநாள் டிசம்பர் 2-ல் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் படி 29,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழை மூலமும், சிறு ஏரிகள் நிரம்பி வழிந்ததன் மூலமும் உருவான 80 ஆயிரம் கன அடி தண்ணீர் கடந்த டிசம்பர் 2ம் தேதி அடையாறு ஆற்றில் பெருக்கெடுத்தது. இப்படி சுமார் 1 லட்சம் கன அடிநீர் அடையாறில் பெருக்கெடுத்து ஓட ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் கரையோரம் உள்ள ராமாபுரம், கோட்டூர்புரம், ஈக்காட்டுத்தாங்கல், சைதாபேட்டை மட்டுமல்லாமல் ஆயிரம்விளக்கு, சிந்தாதிரிப்பேட்டை, தேனாம்பேட்டை, நந்தனம், தி.நகர், மைலாப்பூர் வரை தண்ணீர் புகுந்தது.

நிலைகுலைந்த சென்னை வரலாறு காணாத வெள்ளத்தினால் பணம், பொருள் மட்டுமல்லாமல் விலை மதிக்க முடியாத உயிர்களும் நூற்றுக்கணக்கில் பறிபோனது. பல குடும்பங்கள் பிரிந்த சோகமும் நிகழ்ந்துள்ளது. பலர் ஊரையே காலி செய்து விட்டு சென்றனர். இந்த வெள்ளத்தால் சென்னையில் அனைத்து வகையான பொருட்களுக்குமே பற்றாக்குறை ஏற்பட்டு விலைகள் அனைத்தும் விஷம்போல் ஏறியுள்ளது. நாட்டின் முக்கியமான நகரங்களில் 4வது இடத்தில் உள்ள சென்னை, அனைத்து வகையான அடிப்படை கட்டமைப்புகளையுமே இழந்து, சீரழிவைச் சந்தித்துள்ளது.

50 லட்சம் பேர் பாதிப்பு மழை வெள்ளத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரைச் சேர்ந்த 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 10 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்கள், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சிறு, குறு தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் அனைத்தும் அடியோடு நாசமாகிவிட்டது. இந்த மோசமான நிலைக்கு ஒரு சில உயர் அதிகாரிகள்தான் காரணம் என்ற திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அலட்சியப்படுத்திய அதிகாரிகள் சென்னை நகரின் பேரழிவுக்கு அதிகாரிகளே காரணமாக இருந்துள்ளனர். சென்னையில் கடந்த 1 மற்றும் 2ம் தேதிகளில் 500 மி.மீ மழை பெய்யும் என பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டது. ஆனால், செய்தி வெளியானதும் இது குறித்து தமிழக அரசு கவலைப்பட்டதாகவோ, உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகவோ தெரியவில்லை. வழக்கம்போல, ஒரு ஆலோசனைக் கூட்டம் கூட நடத்தாமல் அதிகாரிகள் அமைதியாகிவிட்டனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும், செம்பரம்பாக்கம் ஏரியில் நவம்பர் மாதம் முதல் மழை பெய்து வரும் நிலையில் படிப்படியாக நீரை திறந்துவிட்டு குறைத்துக் கொண்டே வந்திருக்க வேண்டும். ஆனால், இந்த ஏரியை கண்காணிப்பு செய்வதில் பொதுப்பணிதுறை அதிகாரிகளும், மற்ற சம்பந்தபட்ட அதிகாரிகளும் பெரிய அளவில் ஆலோசனைகள் நடத்தவில்லை.

பாதிப்பிற்கு காரணம் செம்பரம்பாக்கம் ஏரியில் கன மழை பெய்து, தண்ணீர் ஏரிக்கு தொடர்ந்து 4 நாட்கள் வந்தாலும், அதை தேக்கி வைக்கும் அளவிற்கு இடமிருந்தது. இந்நிலையில் மழை தண்ணீர் ஏரிக்கு அதிகம் வந்த நிலையில் படிப்படியாக அந்த தண்ணீரை திறந்து விடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அடையாறு ஆறுக்கு 200 குளங்களில் இருந்து தண்ணீர் வந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதே நேரத்தில் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் 2 நாட்களாக திறந்துவிடப்பட்டதே ஆற்றின் ஓரமாக இருந்த பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதற்கு முக்கியமான காரணம்.

முன்னெச்சரிக்கை இல்லை தண்ணீரை திறப்பது குறித்து முடிவு எடுப்பதில் அதிகாரிகள் கடும் தாமதம் செய்தனர். தலைமை செயலாளரின் உத்தரவிற்காக பொதுப்பணித்துறை செயலாளர்களும் அதிகாரிகளும் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பின்னர் திடீரென்று எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல், மாநில நிர்வாகம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாறு ஆறுக்கு விநாடிக்கு 33 ஆயிரத்து 500 கன அடி திறந்துவிட முடிவு செய்தது. ஆனால், திறந்தவிடப்பட்ட தண்ணீரின் அளவோ முடிவு செய்யப்பட்ட அளவை விட இரண்டு மடங்கானது. 24 அடி உயரம் கொள்ளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிய பின் இவ்வளவு அதிகமான தண்ணீரை திறந்து விடுவதில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

காத்திருந்த அதிகாரிகள் கடந்த நவம்பர் 26 முதல் 29ம் தேதி வரை சென்னை சுற்று வட்டாரத்தில் அதிகளவு மழை இல்லை. இந்த சமயத்தில் செம்பரப்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டால், அது குறைந்த அளவாகவே இருந்திருக்கும். அப்போது அடையாற்றில் வெள்ளமும் இல்லை. ஆனால் இதனை அதிகாரிகள் செய்யவோ அல்லது ஏரி திறப்பு விஷயத்தில் முடிவெடுக்காமலோ தாமதப்படுத்தியுள்ளனர். பின்னர் டிசம்பர் 1-ந் தேதியும் 2-ந் தேதியும் 20,000; 29,000 கன அடிநீரை திடீரென தொடர்ந்து திறந்துவிட்டதாலேயே வெள்ளம் சென்னையை மூழ்கடித்தது. செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து அடையாற்றில் அதிகபட்சமாக வினாடிக்கு 33,500 கன அடி தண்ணீர்தான் திறந்து விட முடியும். மதகுகளுக்கு தாங்கும் திறன் அவ்வளவுதான்.

தாமதத்திற்கு காரணம் ஆனால் எந்த ஒரு முன்னறிவிப்பும் செய்யாமல் செம்பரம்பாக்கம் ஏரி நீரை திடீரென திறந்துவிட்டதுதான் பெருவெள்ளத்துக்கு காரணம். இதற்கு அதிகாரிகளின் தாமதமான முடிவுதான் என்பது உறுதியாகி உள்ளது. அவர்கள் செம்பரம்பாக்கம் ஏரி படிப்படியாக திறக்கவில்லை? பல்லாயிரம் கன அடி நீரை எப்படி திடுமென திறந்துவிட்டார்கள்? திறக்கும் வரை யாருடைய உத்தரவுக்காக காத்திருந்தார்கள் என்பது போன்ற பல கேள்விகள் புரியாத பெரும்புதிராக தொடர்கிறது.

ஊழியர்களின் கதி என்ன? இந்நிலையில், டி.எல்.எஃப்பில் பணிபுரிந்த தூத்துக்குடியைச் சேர்ந்த 7 பேரை காணவில்லை என்று அவர்களது உறவினர்கள் அங்கு காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யச் சென்றிருக்கிறார்கள். ஆனால், புகாரை வாங்கிக் கொள்ள மறுத்து சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்றொரு தகவலும் கிடைத்திருக்கிறது. அதோடு டி.எல்.எஃப் வளாகத்திலிருந்து சில அதிர்ச்சி செய்திகள் வருகிறது. அதன் உண்மைத்தன்மையை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு பதிவு செய்கிறோம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.