எரிவாயு மானியம் ரத்து என்பது மிகவும் கண்டிக்கத்தக்க, தேவையற்ற ஒரு முடிவாகும். அந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் மானிய விலையில் 406.76 ரூபாய்க்கு தற்போது சென்னையில் விற்கப்படுகிறது.
மானியம் இல்லாமல் 622.50 ரூபாய்க்கு தரப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையிலே வழங்கப்படுகின்றன.
அதற்கு மேல் சிலிண்டர் தேவையென்றால் சந்தை விலையிலே தான் வாங்க முடியும். சிலிண்டர்களுக்கான மானியத் தொகையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்தது.
தற்போது மத்திய அரசு இந்த மானியத் தொகையை பெரும் சுமையாகக் கருதி, அதற்கான நடவடிக்கைகளில் இறங்க முயற்சிக்கின்றது. ஒரு பக்கம் வரி வருவாயை உயர்த்துகின்ற முயற்சிகளில் ஈடுபடுவதோடு, மானியங்களைக் குறைக்கும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இதன் முதல் முயற்சியாகத் தான், எண்ணெய் நிறுவனங் கள் மூலம் வழங்கப்படும் மானியத்தை, மக்களுக்கு அரசே நேரடியாக வழங்க முடிவு செய்து நேரடி காஸ் மானியத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி, இந்தத் திட்டத்தில் காஸ் இணைப்பு வைத்திருப்போரின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் இந்தியாவில் 54 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தது.
இதன் பிறகு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல், நாடு முழுதும் நேரடி மானியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி மானியத் தொகை வங்கிக் கணக்கிலே சேர்க்கப்படும்.
இதற்குப் பிறகு, நுகர்வோர் தாங்களாகவே முன் வந்து மானியத்தை கை விட வேண்டுமென்ற முயற்சியிலே மத்திய அரசு இறங்கியது. இதன்படி 57.5 இலட்சம் வாடிக்கையாளர்கள் மானியத்தைத் தாங்களாக முன் வந்து கை விட்டனர். தற்போது பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கணவன் அல்லது மனைவியின் வருமான வரிக்கு உட்பட்ட ஆண்டு வருமானம் முந்தைய நிதியாண்டு கணக்கீட்டின்படி பத்து இலட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அவர்களுக்கு இனி சமையல் காஸ் மானியம் வழங்கப்பட மாட்டாது. சந்தை விலையில் தான் காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும்" என்று அறிவித்திருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக, மண்ணெண்ணெய், யூரியா போன்றவைகளுக்கும் வழங்கப்படும் மானியத்திலும் மத்திய அரசு கை வைக்கக் கூடுமென்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டுள்ளது.
தற்போதுள்ள நடைமுறைப்படி மண்ணெண்ணெய் மானியத் தொகையை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்குகிறது. யூரியாவைப் பொறுத்தவரையில், 2005-2006-ல் 18 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக இருந்த மானியம், 2015-16ஆம் நிதியாண்டில் 73 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மண்ணெண்ணெய் மானியத்தை ரத்து செய்தால், எரிபொருள் பறி போய், விளக்கும் அணைந்து ஏழை எளியோர் எல்லையற்ற பாதிப்புக்கு ஆளாவர். யூரியா மானியத்தை ரத்து செய்தால், விவசாயிகள் பாதிக்கப்படுவர்.
இவ்வாறு மானியத்தைப் படிப்படியாகக் குறைத்து, நுகர்வோர் மனதிலே, மானியம் ஒரு பொருட்டாகவே இல்லாத மன நிலையை உருவாக்கி, பொதுச் சந்தையில் ஒரே விலையில் விற்கின்ற நிலைமையை ஏற்படுத்த பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய அரசு திட்டமிடுகிறது.
பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால், இந்தியப் பொருளாதாரம் சரிந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஏற்கனவே சுமார் 60 லட்சம் பேர், அரசின் வேண்டுகோளுக்கிணங்க எரிவாயு மானியத்தை தாங்களாகவே முன் வந்து விட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.
எரிவாயு மானியம் ரத்து என்பது மிகவும் கண்டிக்கத்தக்க, தேவையற்ற ஒரு முடிவாகும். எனவே பா.ஜ.க. அரசு தற்போதுள்ள காஸ் மானியத்தை ரத்து செய்வோம் என்று முடிவு செய்திருப்பதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்றும்; மண்ணெண்ணெய் - யூரியா மானியத்தை ரத்து செய்யும் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்"
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment